எத்தனை கட்சிகள் வந்தாலும் திமுக தனித்தே போட்டியிடும்...! - நடிகர் தனுஷ் அரசியல் வருகை குறித்து அமைச்சர் எஸ். ரகுபதி பேட்டி...!
No matter how many parties come DMK contest alone Interview Minister S Raghupathi regarding actor Dhanush entry politics
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள கொன்னையூரில் திமுக முன்னாள் அமைச்சரும், திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ். ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, நடிகர் தனுஷின் அரசியல் வருகை, திமுகவின் தேர்தல் நிலைப்பாடு, தவெகவினரின் அரசியல் அணுகுமுறை மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கருத்துகள் குறித்து அவர் தனது விமர்சனங்களை முன்வைத்தார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியபோது, நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு இருக்கிறது? யோகிபாபு, தனுஷ் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தனுஷ் தற்போது தன்னிச்சையாக நற்பணி இயக்கத்தைத் தொடங்கி, அதன் வாயிலாக மக்களைச் சந்தித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதும், தேர்தலில் போட்டியிடுவதும் அவருடைய தனிப்பட்ட முடிவைப் பொறுத்தது. இதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.ஆனால், தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வலிமையும் துணிச்சலும் கொண்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே. எனவே, எத்தனை புதிய கட்சிகள் அரசியல் களத்தில் குதித்தாலும், இனிவரும் தேர்தல்களில் திமுக தனித்தே போட்டியிடும்.ஒரு அரசியல் கட்சியை வெளியில் இருந்து யாராலும் அழித்துவிட முடியாது.
அப்படி ஒரு கட்சி வீழ்ச்சியடைந்தால், அதற்குத் தனது சொந்தத் தவறுகளே காரணமாக இருக்கும். தவெகவினர் தங்களை மிகப்பெரிய சக்தியாகக் கருதிக்கொண்டு, மற்ற அரசியல் கட்சிகளை அழித்துவிட்டதாக நினைத்தால், இறுதியில் அவர்களே வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும். மற்ற கட்சிகளை அவ்வளவு எளிதில் அழித்துவிட முடியாது.விராலிமலை தொகுதி கடந்த ஐந்து ஆண்டுகளாக இருண்டு கிடந்ததாக அமைச்சர் முகமது பர்வேஸ் அங்கு நடைபெற்ற விழாவில் பேசியுள்ளார்.
ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் விராலிமலை கோவிலில் ‘ஓம்’ என்ற விளக்கை ஒளிரச் செய்ததைத் தவிர, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வேறு எந்தப் பெரிய பணியையும் மேற்கொள்ளவில்லை. எனவே, விராலிமலை தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மக்கள் அவருக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்.
மேலும், நிதி ஆதாரங்களைப் பெருக்கி ஆட்சியைச் சிறப்பாக நடத்துவதற்கான தொலைநோக்குச் சிந்தனை ஆட்சியாளர்களிடம் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைப் போல முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் அச்சமுள்ள அமைச்சர் வேறு யாரும் இல்லை. மேடைகளில் பேசும் கருத்துகளைச் செய்தியாளர்கள் முன்னிலையில் அதே துணிச்சலுடன் தெரிவிக்காமல், பின்னர் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்குகிறார்.
விராலிமலை தொகுதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், அந்தத் தொகுதியின் வேட்பாளர் சி. விஜயபாஸ்கர்தான் என்று செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கூட்டம் இருக்கும்போது ஒரு விதமாகவும், கூட்டம் இல்லாதபோது வேறு விதமாகவும் பேசுவது அவருடைய வழக்கமாகிவிட்டது. அவரது கருத்துகளுக்கு தமிழக மக்களிடையே எந்தவிதமான மதிப்பும் இல்லை.இவ்வாறு எஸ். ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
English Summary
No matter how many parties come DMK contest alone Interview Minister S Raghupathi regarding actor Dhanush entry politics