ரியாத் விமான நிலையத்தில் ஏவுகணைத் தாக்குதல்...! சவுதிக்கு விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா, ஆகாசா ஏர்...!
Missile attack at Riyadh airport Air India Aqasa Air cancel flights to Saudi Arabia
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சவுதி அரேபியாவுக்கான விமானப் போக்குவரத்தை இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால், சவுதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.ஏமன் நாட்டில் அரசுப் படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது.

இந்த மோதலில் ஏமன் அரசுப் படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே நீண்டகாலமாக நிலவி வரும் அரசியல் மற்றும் ராணுவப் போட்டியின் தாக்கமும் ஏமன் மோதலில் எதிரொலித்து வருகிறது.
இதனால், அப்பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த சில வாரங்களாக ஏமனில் அரசுப் படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. அவ்வப்போது சவுதி அரேபியாவைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்குப் பதிலடியாக, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகளும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்தச் சூழலில், கடந்த புதன்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் விமானி உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்ததாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பதற்றமான சூழலும் நிலவி வருகிறது.
தொடர்ந்து அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவுக்கான விமானச் சேவைகளை இந்திய விமான நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.இதன்படி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சவுதி அரேபியாவுக்கான தனது விமானச் சேவைகளை வரும் 14ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் தனது சேவைகளை வரும் 15ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளது.அதேபோல், ஆகாசா ஏர் நிறுவனமும் சவுதி அரேபியாவுக்கான விமானச் சேவைகளை நாளை வரை இயக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் இந்திய விமான நிறுவனங்கள் அடுத்தடுத்து விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.
இதனால், சவுதி அரேபியாவுக்குச் செல்லவும் அங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்பவும் திட்டமிட்டிருந்த பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.விமானச் சேவைகள் எப்போது மீண்டும் வழக்கம்போல் தொடங்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு பயணிகளிடையே எழுந்துள்ளது. நிலவும் பாதுகாப்புச் சூழலைப் பொறுத்து விமான நிறுவனங்கள் அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Missile attack at Riyadh airport Air India Aqasa Air cancel flights to Saudi Arabia