தமிழகத்தில் இப்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை? தேர்தல் ஆணையத்தின் முடிவால் தவெக அப்செட்.. விஜய்யின் கணக்கில் புதிய சிக்கல்!
No byelections in Tamil Nadu for now TVK upset by the Election Commission decision A new complication for Vijay
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், இடைத்தேர்தல்களை முக்கிய வாய்ப்பாகக் கருதி வந்தது. காலியாக உள்ள தொகுதிகளில் அதிக இடங்களைக் கைப்பற்றி சட்டப்பேரவையில் தனது பலத்தை அதிகரிக்க தவெக திட்டமிட்டிருந்த நிலையில், தற்போதைக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்ற தகவல் அக்கட்சித் தலைமையை அதிருப்தியடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை தவெக பெறவில்லை.
இதனால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்தது.
முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
அதேபோல், ஆயிரம் விளக்கு தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் சட்டப்பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்றார். இதனால் சட்டப்பேரவையில் தவெகவின் நேரடி பலம் 106 ஆகக் குறைந்தது.
பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக மற்றும் அமமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
இந்தச் சூழலில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சினைகள் காரணமாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகத் தொடங்கினர். முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் தற்போது பல சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாகியுள்ளன. முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து, மொத்தம் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
ஒரு சட்டப்பேரவைத் தொகுதி காலியானால், பொதுவாக ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. இதனால் தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தல்களை தவெக மிக முக்கியமான அரசியல் வாய்ப்பாகக் கருதியதாகக் கூறப்படுகிறது. காலியாக உள்ள தொகுதிகளில் பெரும்பாலான இடங்களை வென்றால், சட்டப்பேரவையில் தனது பலத்தை அதிகரித்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை அதிகமாக சார்ந்திருக்காமல் ஆட்சியைத் தொடர முடியும் என்பது தவெகவின் கணக்காக இருந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யலாம் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. ஒருவேளை 12 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால், அதில் அதிக இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையை நெருங்க முடியும் என்ற நம்பிக்கை தவெக தலைமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில்தான் பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அந்த அறிவிப்புடன் தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக தொகுதிகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகாதது அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குகளின் நிலையைப் பொறுத்து இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதனால், தமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தலை நடத்தாமல் காத்திருக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்தத் தகவல் தவெக தலைமையை அதிருப்தியடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இடைத்தேர்தல் மூலம் சட்டப்பேரவையில் தனது எண்ணிக்கையை அதிகரித்து, ஆட்சியை மேலும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற தவெகவின் திட்டத்தில் தற்போது தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அதேநேரத்தில், தொகுதி காலியான நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் இருப்பதால், இடைத்தேர்தலை நீண்ட காலத்திற்கு தள்ளிப்போட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்படும், நீதிமன்ற வழக்குகள் தேர்தல் அட்டவணையில் தாக்கத்தை ஏற்படுத்துமா, இடைத்தேர்தல் மூலம் சட்டப்பேரவையில் தனது பலத்தை அதிகரிக்க நினைக்கும் தவெகவின் திட்டம் நிறைவேறுமா என்பதுதான் தற்போது தமிழக அரசியலின் அடுத்த முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
English Summary
No byelections in Tamil Nadu for now TVK upset by the Election Commission decision A new complication for Vijay