அமைச்சர் மரிய வில்சனுக்கு புதிய சிக்கல்...எம்.எல்.ஏ. சான்றிதழை திரும்பப் பெறக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு வக்கீல் நோட்டீஸ்....!
New problem Minister Maria Wilson MLA Lawyer notice Election Commission requesting withdrawal certificate
தனது கல்வி நிறுவனத்துக்கு அனுமதி பெறுவதற்காக லஞ்சம் வழங்கியதாக சட்டசபையில் பேசிய அமைச்சர் மரிய வில்சன் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், அவர் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி தேர்தல் ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சி.ஜெனிபர் சார்பில், அவரது வக்கீல் பி.விஜயேந்திரன் மூலம் இந்திய தேர்தல் ஆணையர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை இயக்குனர் ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரிய வில்சன். தற்போது அவர் மாநில நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.சமீபத்தில் சட்டசபையில் பேசியபோது, தனது கல்வி நிறுவனத்துக்கு அனுமதி பெறுவதற்காக முன்னாள் அமைச்சருக்கு லஞ்சம் வழங்கியதாக அவர் தெரிவித்ததாக நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு அமைச்சராக பதவி வகிக்கும் நிலையில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவிப்பது அரசியலமைப்பு நடைமுறைகளுக்கும், ஊழல் தடுப்பு சட்ட விதிகளுக்கும் முரணானதாகும். எனவே, அவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சராக பதவியேற்றபோது ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு முரணாகவும், தேர்தல் ஜனநாயகத்தின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் அவரது செயல்பாடு இருப்பதாக நோட்டீசில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும், அவர் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக வழங்கப்பட்ட தேர்தல் சான்றிதழை திரும்பப் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
எனவே, அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும். அதேபோல், அவரது தேர்தல் சான்றிதழ் தொடர்பாகவும் தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல் நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நீதிமன்றத்தை அணுகி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
New problem Minister Maria Wilson MLA Lawyer notice Election Commission requesting withdrawal certificate