நீட் வினாத்தாள் கசிவு எதிரொலி: மாணவி தற்கொலைக்கு மோடி அரசே காரணம் - ராகுல் காந்தி கடும் சாடல்!
NEET Paper Leak Fallout Aspirant Dies by Suicide Rahul Gandhi Blames Modi Govts Corrupt Administration
மே 3 அன்று நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே தேர்வெழுதிய சுமார் 22 லட்சம் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிச்சயமற்ற சூழலால் மாணவர்கள் பலர் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீட் மறுதேர்வு பயத்தால் பறிபோன இளம் உயிர்
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆகான்ஷா சதுர்வேதி என்ற மாணவி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தங்கி நீட் தேர்வுக்காகப் படித்து வந்தார். வினாத்தாள் கசிவு காரணமாக மீண்டும் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், "மறுதேர்வு எழுத எனக்குத் தைரியம் இல்லை" என்று உருக்கமாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ராகுல் காந்தியின் உருக்கமான எக்ஸ் (X) பதிவு
இந்தத் துயரச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய மோடி அரசை மிகக் கடுமையாகச் சாடித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"இது தற்கொலை அல்ல, நிர்வாகக் கொலை!"
"ஆகான்ஷா ஒரு மருத்துவராகி சமூகத்திற்குச் சேவை செய்ய விரும்பினார். ஒரு விவசாயியான அவரது தந்தை, தன் மகளின் மருத்துவக் கனவிற்காக கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். மேலும், மகளுடன் நாக்பூரிலேயே தங்கி ஒரு சமையல்காரராக வேலை செய்து அவரைப் படிக்க வைத்தார். ஒரு தந்தையாகத் தன் கடமையை முழுமையாகச் செய்த அவருக்குக் கிடைத்தது மகளின் பிணம்தான். ஆகான்ஷாவின் மரணம் ஒரு தற்கொலை அல்ல; அது மோடி ஆட்சியில் நிலவும் ஊழல் மற்றும் சீர்குலைந்த நிர்வாகத்தின் நேரடி விளைவு."
கல்வி அமைச்சருக்குக் கண்டனம்
தொடர்ந்து தனது பதிவில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் ராகுல் காந்தி சாடியுள்ளார். இவ்வளவு பெரிய முறைகேடு நடந்தும் கல்வி அமைச்சர் இன்னும் தனது நாற்காலியிலேயே அமர்ந்திருக்கிறார் என்றும், அதே கமிட்டி, அதே இடமாற்றங்கள், அதே விசாரணைகள் என நாடகம் ஆடுகிறார்களே தவிர, மாணவர்களுக்கு எந்தவொரு நீதியோ, கல்விச் சீர்திருத்தமோ இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாகப் பிரதமர் மோடியை நோக்கி, "அதிகாரம் என்பது நிரந்தரமானது அல்ல; அது வரும், போகும். ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் நீங்கள் இந்தியாவின் கல்வி முறையை எந்த அளவிற்கு நாசமாக்கியிருக்கிறீர்களோ, அதற்கான விலையை நாட்டின் ஒட்டுமொத்த இளைய தலைமுறையும் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறது" என்று ராகுல் காந்தி மிகுந்த ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
English Summary
NEET Paper Leak Fallout Aspirant Dies by Suicide Rahul Gandhi Blames Modi Govts Corrupt Administration