விவசாயிகளை வஞ்சிக்க வேண்டாம்; பாபநாசம் அணையிலிருந்து உடனடியாக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும்; நயினார் நாகேந்திரன் ..!
Nayinar Nagendran demands immediate release of 1500 cubic feet of water per second from Papanasam Dam
''விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல், பாபநாசம் அணையிலிருந்து உடனடியாக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்துவிடத் தவெக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ''என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் நடத்திய போராட்டம், அவர்களின் நியாயமான மனக் குமுறலாகும். தங்கள் உதிரத்தை வியர்வையாகச் சிந்தி, பெற்ற பிள்ளைகளைப் போல வளர்த்த பயிர்கள் கருகக் கண்டு ஒரு விவசாயி சிந்தும் கண்ணீர் இந்த மண்ணின் சாபமாகும். 5,000 ஏக்கர் பயிர்கள் தண்ணீரின்றி அழியும் நிலையில் இருப்பதைக் கண்டும், தவெக அரசு காட்டும் மெத்தனம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கடந்த ஆறு மாத காலமாக தண்ணீர் கேட்டு கதறித் துடித்த விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத தவெக அரசு, இன்று நியாயம் கேட்டுப் போராடியவர்களைக் காவல்துறையை ஏவி கைது செய்திருப்பது கொடுமையின் உச்சம். தங்களின் வயிற்றிலடித்துவிட்டு தொழிற்சாலைகளுக்குத் தண்ணீரைத் தாரைவார்ப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கு கண்டிக்கத்தக்கது.
விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல், பாபநாசம் அணையிலிருந்து உடனடியாக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்துவிடத் தவெக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட விவசாயிகளை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அவர்களுக்காக பாரதிய ஜனதா கட்சி முன்னின்று களம் இறங்கும் என எச்சரிக்கிறேன்.'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Nayinar Nagendran demands immediate release of 1500 cubic feet of water per second from Papanasam Dam