கர்நாடக மாநில பாஜக அரசை முன் உதாரணமாக காட்டி, தமிழக அரசை கேள்வி கேட்கும் கமல்ஹாசன்! - Seithipunal
Seithipunal


‘‘லோக் ஆயுக்தா - தனி நீதிமன்றம் - சேவை உரிமைச் சட்டம்” போன்ற இலஞ்ச-ஊழல் ஒழிப்புச் சட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதும் 1983-ம்ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 38 ஆண்டுகளில், நிலுவையில் இருக்கும் 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று, விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்கள் பலர் மீது லஞ்ச ஒழிப்புப்  போலீஸார் பதிவு செய்து, நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகள் தொடர்பாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஊழல் வழக்குகளை இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தால், ஊழலை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது, அது வழக்கின் தன்மையை நீர்த்துப்போகச் செய்து, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப வழிவகுக்கும் என்று கவலை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஊழல் வழக்குகளை விரைந்து விசாரிக்காவிட்டால், ஊழல் தடுப்புச் சட்டத்தின் நோக்கத்தையே வீழ்த்திவிடும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். லஞ்சம், ஊழல் தொடர்பாக மக்களின் எண்ணங்களை நீதிபதி பிரதிபலித்துள்ளார்.  அவருக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டுகளைத் தெரிவிக்கிறது.

மக்கள் வரிப் பணத்தில் ஊதியம் வாங்கிக் கொண்டு, பொதுமக்களுக்கான சேவைகளைப் புரிவதற்கே லஞ்சம் வாங்கிய அலுவலர்கள் ஏராளமானோர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரிடம் சிக்கியும்கூட, எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஓய்வுபெறும் சூழல் நிலவுகிறது. பலர் மீது குற்றப்பத்திரிக்கையே பதிவு செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது. 

தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பார்கள். ஊழல் வழக்குக் குற்றவாளிகள் எவ்வித தண்டனைக்கும் உள்ளாகாமல், மீண்டும் மீண்டும் ஊழலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. லஞ்சம், ஊழலில் ஈடுபட்டுக் கொண்டிருப்போரில் சிக்குபவர்கள் கொஞ்சம் பேர்தான். அவர்களும் தண்டிக்கப்படாமல் இருந்தால், சமுதாயத்தில் புரையோடிப்போன லஞ்சத்தை தடுத்து நிறுத்துவது எப்படி?

எனவே, லஞ்ச வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.  லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையை இன்னும் வலுப்படுத்துவதுடன், லஞ்ச வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், நீதித்துறைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

மேலும் முன்னாள் அமைச்சர்கள்,தற்போதைய அமைச்சர்கள் போன்ற உயர்பொறுப்பிலுள்ளோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை உரிய முறையில் விசாரிக்கும் பொருட்டு “லோக் ஆயுக்தா” அமைப்பானது வலுவாக்கப்பட
வேண்டும். நீதிமன்றங்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக உருவாக்கப்பட்ட “லோக் ஆயுக்தா” அமைப்பானது தற்போது தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவில்தான் இருக்கிறது. வெறும் ஏட்டளவில்தான் இச்சட்டம் செயல்பட்டுவருகிறது. 

திமுக தேர்தல் அறிக்கையில் (வாக்குறுதி எண்:18)”...லோக் ஆயுக்தா முறையாகவும், முழுமையாகவும் செயல்படத் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாக மேற்கொள்ளும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிப்பொறுப்பேற்று 18 மாதங்கள் ஆகியும், ‘‘லோக் ஆயுக்தா”வை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்படவில்லை. 

இனிமேலாவது இந்நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது. பக்கத்து மாநிலமான கர்நாடகாவில், லோக் ஆயுக்தா அமைப்பின் விசாரணையின் காரணமாக அப்போது முதல்வராக இருந்த எதியூரப்பா (பாஜக) அவர்கள் சிறைசெல்ல நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல், ‘‘...கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் புகாருக்கு உள்ளான அமைச்சர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க தனி நீதிமன்றங்கள்” அமைக்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதியும் (வாக்குறுதி எண்: 21) இன்னும் செயல்படுத்தப்படவில்லை; குறித்த காலத்திற்குள் அரசு சேவைகள் தரப்படுவதை உறுதி செய்யும் “சேவை பெறும் உரிமைச் சட்டம்” குறித்தான வாக்குறுதியும் (வாக்குறுதி எண்:19) இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை.

இலஞ்ச ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தையே அனைத்து மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இதுபோன்றதொரு நல்ல நிர்வாகத்தை நடத்துவதான் எங்கள் நோக்கம் என்று முதல்வர் தொடர்ந்து பேசிவருகிறார். ஆனால், மேற்குறிப்பிட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் வெளிப்படையான டெண்டர்முறைகளை மேற்கொள்ளாவிடில் இலஞ்ச-ஊழல் ஒழிப்பு என்பது வெறும் பேச்சளவில்தான் இருக்குமே தவிர செயல்பாட்டுக்கு வராது. ஊழல் ஒழிப்புச் சட்டங்களைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவாரா முதல்வர்?" என்று செந்தில் ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM Kamalhasan Say About Lok Ayudha law 2022


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->