'மாணிக்கம் தாகூர் எம்.பி. தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை'; அமைச்சர் பெரியசாமி..!
Minister Periyasamy said that they do not agree with MP Manickam Tagore issuing statements every day
டி.என்.பி.எஸ்.சி.-2 தேர்வு நடைபெறாததற்கு நிர்வாகத்திறமை இல்லை என சொல்வதை ஏற்க முடியாது என்று அமைச்சர் இ.பெரியசாமி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் அவர் கூறியதாவது:-
இந்தியாவிலேயே நிர்வாகத்திற்கு பெயர் போன இயக்கம் தி.மு.க. என்றும், தமிழ்நாடு தலைசிறந்த நிர்வாகமும், மாநில வளர்ச்சியிலும் முதலிடம் என மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளதாகவும், எல்லாத்துறையிலும் தமிழ்நாடு வளர்ந்துள்ளதோடு, அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அப்போது, காங்கிரஸ் கட்சி கூட்டணிக்காக குழு அமைத்து 36 நாட்கள் ஆகிவிட்டது என்றும், தி.மு.க. பதில் சொல்லவில்லை என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார். நான் ஒரு கட்சியின் அமைச்சராக இருக்கிறேன். நாங்கள் கட்டுப்பாடுடன் வளர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், கருத்து என்பது கட்சிக்கு உடன்பாடு உள்ளதாக இருக்க வேண்டும் எனவும், மாணிக்கம் தாகூர் எம்.பி. தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், இயக்கத்தின் தலைவர்கள் சொன்னால் அதற்கு பதில் சொல்லலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழ்நாடு அரசு அதிகமாக கடன் வாங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஆனால், அ.தி.மு.க. அரசு ரூ.5½ லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றார்கள். அதற்கு ஓராண்டிற்கு வட்டி எவ்வளவு என கணக்கீட வேண்டும். 36,000 முதல் 40,000 கோடி தோராயமாக வரும் என்று குறிப்பிட்டுள்ளதோடு, புள்ளிவிபரம் என்னிடம் இல்லை என்று பேசியுள்ளார்.
மேலும், மாநில அரசு நிர்வாகத்தில் மூலதனங்களை உருவாக்குவதற்கும், விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்கும், ஏழை எளிய மக்களுக்கு சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றுவது அவசியம் என்று அமைச்சர் பெரியசாமி குறிப்பிட்டுள்ளதோடு, முதியோர் ஓய்வூதியம் திண்டுக்கல்லில் மட்டும் கடந்த வாரம் 10 ஆயிரம் நபர்களுக்கு கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், தி.மு.க. ஆட்சி காலத்தில் திண்டுக்கல் முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கும், தொகுதிக்கு 20 ஆயிரம் பேருக்கும் முதியோர் உதவித்தொகை கொடுத்து இருந்தோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அனைத்தையும் நிறுத்தி விட்டார் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
அதாவது, 9 லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகையை நிறுத்திய பெருமை அ.தி.மு.க.வை சேரும் என்றும், தற்போது தான் அதனை சரி செய்து 1 லட்சத்து 10 ஆயிரம் நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுத்து வருகிறோம் என்று அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களிடம் பேசியுள்ளார்.
English Summary
Minister Periyasamy said that they do not agree with MP Manickam Tagore issuing statements every day