பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் பெரும் முறைகேடு...! - 8 மாநிலங்களை சுட்டிக்காட்டிய CAG அறிக்கை...!
Massive irregularities Prime Ministers Skill Development Program CAG report points out 8 states
பிரதமரின் முக்கியமான திறன் மேம்பாட்டு திட்டத்தில் (பிரதமர் கவுஷல் விகாஸ் யோஜனா) பெரும் அளவிலான முறைகேடுகள் நடந்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (CAG) வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் பிரதமர் கவுஷல் விகாஸ் யோஜனா திட்டம், நாட்டின் பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.
இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் கண்காணித்து வருகிறது.ஆனால், அசாம், பீகார், ஜார்கண்ட், மராட்டியம், கேரளா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் இந்தத் திட்டத்தில் கடுமையான நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாக குளறுபடிகள் நடந்துள்ளதை CAG கண்டறிந்துள்ளது.
மோசமான நிதி மேலாண்மை மட்டுமின்றி, மாணவர் சேர்க்கை விவரங்களில் பெரும் தவறுகள் இடம்பெற்றுள்ளதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.500 ஊக்கத்தொகை செலுத்தப்பட வேண்டும்.
ஆனால், 95.90 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவர்களில் 90.66 லட்சத்துக்கும் அதிகமானோரின் வங்கிக் கணக்குகளில் இந்தத் தொகை செலுத்தப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாக வெளிவந்துள்ளது.
அதே நேரத்தில், சிலரின் வங்கிக் கணக்குகளில் இரண்டு முறை அல்லது அதற்கு மேல் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அமைச்சகம் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து ரூ.12.16 கோடியை மீட்டெடுத்துள்ளதாக CAG அறிக்கை தெரிவிக்கிறது. இந்த விவகாரம், பிரதமரின் முக்கியமான நலத்திட்டங்களில் கண்காணிப்பு குறைபாடு குறித்து கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
English Summary
Massive irregularities Prime Ministers Skill Development Program CAG report points out 8 states