'திமுக அடித்த கமிஷனை பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட்டணி தர்மத்திற்காக வெளியே சொல்லவில்லை'; மாணிக்கம் தாகூர்..! - Seithipunal
Seithipunal


பிச்சை எடுப்பதையே தொழிலாக வைத்துள்ள, சொந்த மாவட்டத்திலேயே டெபாசிட் வாங்க முடியாத சீமான் 100 ஆண்டு பாரம்பரிய கட்சியை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும், திமுக அடித்த கமிஷனை பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட்டணி தர்மத்திற்காக நாங்கள் அதை வெளியே சொல்லவில்லை என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பரபரப்பாக பேசியுள்ளார்.

சிவகாசியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது;

கடந்த 2026 தேர்தல் தோல்வி பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. அதில் இருந்து மீள முடியாத சிலர் புலம்பி வருகின்றனர் என்றும், இவ்வளவு நாட்களாக உதயநிதியிடம் இருந்து வந்த புலம்பல் தற்போது சீமானிடம் இருந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பிச்சை எடுப்பதையே தொழிலாக வைத்துள்ள சீமான், சொந்த மாவட்டத்திலேயே டெபாசிட் வாங்க முடியாத சீமான், 100 ஆண்டு பாரம்பரிய கட்சியை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதாவது, சீமான் மரியாதையாக பேசாவிட்டால் அதே பாணியில் காங்கிரஸ் காரன் திருப்பி அடிப்பான் என்றும், இங்கிலாந்து, கனடாவுக்கு வசூல் செய்ய செல்லும் சீமான், இலங்கைக்கு சென்று தமிழர்களை பார்க்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், 2014-இல் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டு தோல்வி அடைந்தது. 2016-இல் தனியாக போட்டியிட்ட திமுகவும் தோல்வி அடைந்தது. அதன்பின் திமுக தான் கூட்டணிக்கு வந்தது என்றும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவியுங்கள் என நாங்கள் கேட்கவில்லை. தமிழ்நாட்டில் ராகுல் காந்தி மீது இருக்கும் நம்பிக்கை, மரியாதையை வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதற்காக ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காட்டினார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சீமானின் செல்வாக்கு சரிய ஆரம்பித்து விட்டதாகவும், திமுக ஆதரவில்வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என சீமான் பேசியுள்ளார். காங்கிரஸ் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற உதயநிதியை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் என்று கூறியதோடு, உதயநிதி ராஜினாமா செய்த 24 மணி நேரத்தில் நான் எனது பதவியை ராஜினாமா செய்வேன் எண்டு கூறியதோடு, சவாலுக்கு தயாரா என சீமான் தனது தம்பி உதயநிதியிடம் கேட்டு சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேப்போன்று, தேர்தலுக்கு முன் திமுகவை விமர்சித்த சீமான், அனிதா ராதாகிருஷ்ணன் சீர் கொடுத்த பின்னர் உதயநிதிக்கு ஜால்ரா அடிக்கிறார் என்றும், திமுக தோல்விக்கு பென் நிறுவனம் காரணமா அல்லது உதயநிதி காரணமாக என நடக்கும் விவாதத்தை மறைக்க காங்கிரஸ் மீது திமுக பழி போடுகிறது என்று கடுமையாக சாடியுள்ளார்.

அத்துடன், கருணாநிதி மறைவுக்குப் பின் திமுக எந்த திசையில் செல்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்றும், உண்மையான திமுககாரர்கள் வீட்டில் இருக்கிறார்கள். வாடகைக்கு ஆட்களை அழைத்து வந்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டதோடு, மே 04-ஆம் தேதி திமுக - அதிமுக கூட்டணி அமைக்க பேச்சு நடத்தியதால் நாங்கள் திமுக தலைவரை பார்க்க செல்லவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும், உதயநிதி பாஜகவுடன் அண்டர் டீலிங்கில் இருப்பதை தோலுரித்து காட்டுவோம் என்றும், விஜய் ஆட்சியமைப்பதை தடுக்க பாஜக மேற்கொண்ட முயற்சியின் முக்கிய புள்ளியாக உதயநிதி இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், திமுகவால் காங்கிரசும் தோற்று 18 எம்எல்ஏக்களில் இருந்து 05 ஆக குறைந்து விட்டோம். சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்து விட்டோம். வரும் காலங்களில் உதயநிதி தலைமையில் திமுக மிகப்பெரிய தோல்விகளை சந்திக்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய மாணிக்கம் தாகூர், ''கூட்டணி ஆட்சியும், நேர்மையான ஆட்சியும் காங்கிரஸின் இரு கண்கள். முதல்வர் விஜய் - ராகுல் காந்தி இடையிலான நல்ல நட்பு அனைவரும் அறிந்தது. இந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்கும்'' என்று கூறியுள்ளார்.

அதேப்போல, நெடுஞ்சாலைத்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறைகளில் இருந்த 36 சதவிகித கமிஷன், பத்திரப்பதிவு செய்ய ஒரு ஏக்கருக்கு திமுக பெற்ற ரூ.7 லட்சம் நன்கொடை ஆகியவை தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதே போல் பல துறைகளில் ஊழல் குறைந்து வருகிறது. திமுக வாங்கிய கமிஷனை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட்டணி தர்மத்திற்காக அதை வெளியில் சொல்லவில்லை என்று பரபரப்பாக பேசியுள்ளார்.

மேலும், பாஜக அனைத்து தில்லாலங்கடி வேலைகளை செய்தும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாததால், பெயரை, உடையை மாற்றி அண்ணாமலையை இறக்கி விட்டுள்ளதாக பாஜகவையும் விமர்சித்துள்ளார். அதாவது அண்ணாமலையின் புதிய கட்சி ஆர்.எஸ்.எஸ்ஸின் பி பிளான் என்றும், புதிய முகமூடியுடன் வந்துள்ள அண்ணாமலைக்கு எனது வாழ்த்துக்கள். ராஜினாமாவை ஏற்றுக் கொண்டோம் என பாஜக இதுவரை கடிதம் மூலம் அறிவித்தது இல்லை என்றும், போலிகளை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிமுக வரலாறாக மாறிக்கொண்டிருப்பது வருத்தமான விஷயம் என்றும், விருதுநகர் மாவட்டத்தில் கட்சியை முடித்தது ராஜேந்திர பாலாஜி என்றால், தமிழகத்தில் மொத்தமாக முடித்து வைத்த பெருமை பழனிச்சாமியை சாரும் என்றும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆத்மா இந்த துரோகத்தை மன்னிக்காது என்று காங்கிரஸ் எம்.பி. மணிக்கைம் தாகூர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manickam Tagore says the alliance did not reveal the commissions pocketed by the DMK out of adherence to alliance ethics


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->