அன்று விஜயகாந்த் தலைமையில் மநகூ.. இன்று விஜய் தலைமையில் தநகூ? தமிழக நலக் கூட்டணி? யார் பலவீனப்படுவார்கள்?
Managu led by Vijayakanth that day Thanagu led by Vijay today Tamil Nadu Welfare Alliance Who will be weakened
2026 சட்டசபைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் தளத்தில் பெரிய மாற்றத்திற்கான சூழல் உருவாகி வருகிறது. திமுக–அதிமுக கூட்டணிகளைத் தாண்டி, மூன்றாவது சக்திவாய்ந்த கூட்டணி உருவாகும் சாத்தியம் அதிகரித்துள்ளது. இந்த மூன்றாவது அணி உருவாவதற்கான மையமாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம்தான் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
பல கட்சிகள் தனித்தனி கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், 2016 மக்கள் நல கூட்டணி போன்று 2026-ல் “தமிழக நல கூட்டணி” உருவாகலாம் என்ற முன்னறிவிப்பும் வலுத்து வருகிறது. ஆனால் இப்படியான கூட்டணி களமிறங்கினால், அதனால் பலன் பெறுபவர்கள் திமுகவும் பாஜகவும் தான் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
திமுக கூட்டணி ஏற்கனவே பல வருடங்களாகத் தயாராகி வருகிறது. பூத் குழுக்கள் முதல் ஒருங்கிணைப்பு குழுக்கள் வரை அனைத்தும் செயல்பாட்டில் உள்ளன. காங்கிரஸ் மட்டும் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்தாலும், கூட்டணியில் மற்றவர்கள் நிலையானவர்களாகவே இருப்பார்கள் என காணப்படுகிறது. விஜயுடன் கூட்டணி பற்றிய காங்கிரஸ் பேசினாலும், அது அதிகாரபூர்வமான நிலையை எட்டவில்லை.
மறுபுறம் அதிமுக–பாஜக கூட்டணி திணறி வருகிறது. அதிமுகவிற்கு தேவையான பெரிய அளவிலான கூட்டணி அமையும் வரை அவர்கள் நிலை பலவீனமாகவே இருக்கும். தேமுதிக – பாமக இணைந்தால்தான் கூட்டணி வலுப்பெறும். நாம் தமிழர் கட்சி சீமான் ஏற்கனவே தனித்துப் போட்டியிடத் தீர்மானித்திருப்பதால், அவர் பெறும் 8–10% வாக்குகள் பல தொகுதிகளின் முடிவை மாற்றக்கூடியவை.
இந்த சூழலில் நடிகர் விஜயின் கட்சி முக்கியமான காரணியாக மாறியுள்ளது. கட்சி தொடக்கத்தில் இருந்த குழப்பங்கள் தற்போது குறைந்து, செங்கோட்டையன் சேர்ந்த பிறகு கட்சியின் திசை தெளிவடைந்துள்ளது. செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தும் திறனை கருத்தில் கொண்டால், பல கட்சிகள் விஜய் தரப்புக்குச் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும், தேவையான சூழல் உருவானால் பாமக, தேமுதிக, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட அணிகளும் விஜயுடன் இணையும் சாத்தியக்கூறு உள்ளது. இது நடந்தால் வடமாவட்ட வன்னியர் வாக்குகள், கொங்கு மண்டல அதிமுக ஆதரவு வாக்குகள், தென்மாவட்ட முக்குலத்தோர் வாக்குகள் அனைத்தும் விஜய்க்கு திரும்பும் நிலை உருவாகலாம். இதுதான் கடைசியில் திமுகவுக்கும் பாஜகக்கும் சாதகமாகிவிடும்.
அதிமுக வாக்கு வங்கியைப் பிரிக்கும் பணியை விஜயின் கூட்டணி ஏற்றுக்கொண்டால், திமுக நேரடியாக பலம் பெறும். அதேபோல் அதிமுக பலவீனமடைந்தால், முக்கியமான எதிர்க்கட்சியின் இடத்தை பாஜக பிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
மொத்தத்தில், விஜய் தலைமையில் உருவாகும் மூன்றாவது அணி அரசியல் சமன்பாட்டை முற்றிலும் மாற்றும் சக்தி உடையது. ஆனால் அதனால் மிகக் குறைந்தபட்சம் பாதிக்கப்படுபவர்கள் திமுகவும் பாஜகவும் தான் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
English Summary
Managu led by Vijayakanth that day Thanagu led by Vijay today Tamil Nadu Welfare Alliance Who will be weakened