அனிதா ராதாகிருஷ்ணன் மீதான தேவாலய நில மோசடி புகார்: 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
Madras HC Orders Police Report in Land Fraud Petition Against ex Minister Anita Radhakrishnan
தூத்துக்குடி மாவட்டம் சிவராம மங்கலத்தைச் சேர்ந்த வீரசெல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், "கடந்த 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பொறுப்பு வகித்த அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூரில் உள்ள புனித தோமையார் அப்போஸ்தலர் தேவாலயத்திற்குச் சொந்தமான விலதிமதிப்பற்ற நிலத்தைச் சுப்பையா என்பவருடன் இணைந்து முறைகேடாகக் கையகப்படுத்தியுள்ளார்.
போலி அதிகாரப் பத்திரத்தைச் சமர்ப்பித்தும், அரசின் வழிகாட்டு மதிப்பீட்டைக் குறைத்துக் காட்டியும் பத்திரப்பதிவு செய்து பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அவ்வாறு போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட தேவாலயச் சொத்துகளைப் பல்வேறு வங்கிகளில் அடமானம் வைத்துப் பெருந்தொகையைக் கடனாகப் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாகக் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி திருச்செந்தூர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தும், இதுவரை காவல்துறையினர் எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், தனது புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தக் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இம்மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நில மோசடி புகார் மீதான விசாரணை நிலவரம் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கையை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் காவல் துறைக்கு அதிரடி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Madras HC Orders Police Report in Land Fraud Petition Against ex Minister Anita Radhakrishnan