மீண்டும் குறைந்த ஒகேனக்கல் நீர்வரத்து...! வினாடிக்கு 43000 கன அடியாக குறைவு...!
Low water flow in Hogenakkal again Reduced to 43000 cubic feet per second
கனமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கர்நாடக மாநிலத்திலுள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் 2 அணைகளின் பாதுகாப்பு கருதி அதிகளவில் தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் தர்மபுரி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 50,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அவ்வகையில், நேற்று காலை வினாடிக்கு 70,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து அதன் பின்னர் மாலையில் வினாடிக்கு 57,000 கனஅடியாக குறைந்தது.
இதைத்தொடர்ந்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக குறைந்தது.ஆனாலும், ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும், காவிரி கரையோரமுள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல், ஊட்டமலை, சத்திரம், ராணிப்பேட்டை, நாடார் கொட்டாய் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் காவலர்கள் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.மேலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
Low water flow in Hogenakkal again Reduced to 43000 cubic feet per second