நயன்தாரா குறித்து சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு; குஷ்பு, சரத்குமார் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


திமுக அரசின் உங்கள் கனவை கூறுங்கள் திட்டத்தை விமர்சித்து அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது, பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், நடிகை நயன்தாராவை குறிப்பிட்டு சர்ச்சையாக பேசியிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக நிர்வாகிகளான நடிகை குஷ்பு மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோரும் சி.வி. சண்முகம் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நடிகை குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

''பெண்கள், குறிப்பாக பெண் நடிகர்கள் உங்கள் சொத்து அல்ல, உங்கள் பேச்சுப் பொருள் அல்ல, அல்லது ஒவ்வொருவரும் தங்களுக்கு வசதியாக இருக்கும்போதெல்லாம் உரையாடல்களில் இழுத்து வரக்கூடிய ஒரு பண்டம் அல்ல.

ஒரு பெண் நடிகரின் பெயர், மலிவான நகைச்சுவைகளுக்கோ, அற்பமான அவமானங்களுக்கோ, அல்லது ஒருவரின் வாதத்தை நியாயப்படுத்துவதற்கோ ஒரு கருவி அல்ல. மற்றவர்களைக் கேலி செய்வதற்கோ அல்லது ஒரு கருத்தை நிரூபிப்பதற்கோ ஒரு பெண்ணின் அடையாளத்தைப் பயன்படுத்துவது, பேசுபவரின் மனநிலையையும் வளர்ப்பையும் மட்டுமே அம்பலப்படுத்துகிறது.

போதும், இதுவே போதும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணுக்குப் பிறந்தவர்தான். ஒரு பெண் நடிகரைப் பற்றி நீங்கள் சாதாரணமாகக் கருத்துத் தெரிவிப்பதற்கு முன்பு, உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அந்த உதாரணம் உங்கள் தாய், சகோதரி, மனைவி, மகள் அல்லது உங்கள் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தால், நீங்கள் இதேபோல் பேசுவீர்களா?

மக்கள் இதுபோன்ற இழிவான கருத்துக்களைக் கூறும்போது, அவர்கள் குறிப்பிடும் பெண்ணை சங்கடப்படுத்துவதில்லை. மாறாக, அவர்கள் தங்களின் சொந்த மனநிலையையும், மோசமான வளர்ப்பையும், அடிப்படை மனிதப் பண்பின்மையையும் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். இது மரியாதைக் குறைவானது மட்டுமல்ல. இது மனிதகுலத்திற்கே ஒரு அவமானம். மேலும் நினைவில் கொள்ளுங்கள், மரியாதை என்பது ஒருபோதும் ஒருவழிப் பாதை அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்து நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளதாவது:

''தமிழ்நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து, விழுப்புரம் நகராட்சி திடலில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதில், சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியது கண்டனத்திற்குரியது.

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் குறித்து பேசும்போது, பெண்களை இழிவுபடுத்தி பேசுவது தவறு, அதிலும் முக்கியமாக வாழ்க்கையில் சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கி வெற்றி பெற்று கலையுலகத்தில் இருக்கும் பெண்களை எளிதில் உதாரணம் காட்டி இழிவுபடுத்துவது, அனைவருக்கும் வாடிக்கையாக போய்விட்டது.

இதனை திரையுலகம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இச்சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் வருத்தம் தெரிவித்திருந்தாலும், இனி வருங்காலங்களில் இதுபோன்று யாரும் பேசாமல் இருப்பது நல்லது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" என்ற வள்ளுவன் சொல் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.'' எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வருத்தம் தெரிவித்துவிட்டதாக அதிமுக தொழில்நுட்ப அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Khushbu and Sarathkumar condemn CV Shanmugams controversial remarks regarding Nayanthara


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->