கரூர் பெருந்துயரம்: பாஜக தரப்பு மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம்!
Karur Stampede tvk vijay
கரூரில் கடந்த சனிக்கிழமை இரவு விஜய் பங்கேற்ற பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியதால், தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்துள்ளது. இந்த ஆணையம் சம்பவத்தின் பின்னணி, காரணங்கள், பொறுப்புகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தவுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு கரூரில் நடந்ததால், மதுரை கிளையையே அணுக வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனால் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனர்.
ஏற்கனவே, கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரை கிளையில் தனி மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பாஜக கவுன்சிலரின் மனு நிராகரிக்கப்பட்டிருப்பது வழக்கு விசாரணையின் அடுத்த கட்டத்தை மதுரை கிளை மட்டுமே முன்னெடுக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.