புதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன்.! உடனே இதை செய்ய வற்புறுத்தல்.!  - Seithipunal
Seithipunal


கமல் அமையவுள்ள புதிய அரசிடம் கொரோனா பராமரிப்பு குறித்து கோரிக்கை வைத்துள்ளார். 

இதுகுறித்து அவர், "கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

கொள்ளை நோய் பரவும் பேரிடர் கால நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு சில தனியார் மருத்துவமனைகள் ஈவிரக்கமின்றி நடந்து வருகின்றன. எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என மருத்துவக் கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்தியுள்ளனர்.

லட்சக்கணக்கான ரூபாய் முன்பணமாக செலுத்தினால்தான் அனுமதி. அப்படி செலுத்தும் பணத்தில் பாதியை கணக்கில் வராத கருப்புப் பணமாகத் தரவேண்டும். ரசீது கிடையாது. எப்போது கிளம்பச் சொன்னாலும், டிஸ்சார்ஜ் சம்மரி இல்லாமலேயே கிளம்பி விட வேண்டும் என அடாவடி செய்கிறார்கள். எவ்வளவு பணம் கொடுத்து வேண்டுமானாலும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பணம் படைத்தவர்கள் தயாராக இருப்பதால், இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு பகற்கொள்ளை அடிக்கின்றனர்.

உதாரணமாக, நுரையீரல் தொற்று எந்தளவிற்கு உள்ளது என்பதைத் தெரிந்து
கொள்வதற்கான சிடி ஸ்கேன் கட்டணம் ரூ.1500/-ல் துவங்கி ரூ.8,000/- வரை விதம் விதமாக வசூலிக்கப்படுகிறது. ஆர்டிபிசிஆர் சோதனைக்கு ரூ.3,000/- துவங்கி ரூ.10,000/- வரை வசூலிக்கிறார்கள். இப்படியாக கொரோனா சிகிச்சையின் ஒவ்வொரு அலகிலும் கொள்ளை நிகழ்கிறது.

ஒரு மருத்துவரின் சேவைக்கான கட்டணம் அவரது கல்வி, அனுபவம், திறமை பொருத்து மாறுபடலாம். நோயாளிகள் எதிர்பார்க்கும் லக்ஸூரியைப் பொருத்து அறை கட்டணம் மாறுபடலாம். ஆனால், மருத்துவப் பரிசோதனைகள், மருந்து மாத்திரைகள், உபகரணங்கள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆம்புலன்ஸ் என ஒவ்வொன்றும் தமிழகம் முழுக்க வெவ்வேறு கட்டணங்களில் பன்மடங்கு வசூலிக்கப்படுகிறது.

அமையவிருக்கும் புதிய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நெறிப்படுத்த வேண்டும். அதிகபட்ச விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். கொள்ளை நோய் காலத்தில் எல்லாவிதமான மருத்துவ நடைமுறைகளும், சேவைகளும் தரப்படுத்தப்பட்டு ஒரே மாதிரியான கட்டணமே தமிழகம் முழுக்க உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திரு. மு.க. ஸ்டாலின் இதை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kamal Request to Stalin 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->