வாட்ஸ்அப்பில் ஒரு 'ஹாய்' அனுப்புனா போதும்..! ஜாதி, வருமான சான்றிதழ் முதல் கரண்ட் பில் வரை...! - தமிழக அரசின் ‘நம்ம அரசு நம்ம கையில்’ அதிரடி திட்டம்!
Just sending hi WhatsApp enough From caste and income certificates current bills Tamil Nadu government Namma Arasu Namma Kaiya action plan
தமிழக அரசின் பல்வேறு துறைகள் வழங்கும் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் ஏற்கனவே ஆன்லைன் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தனியார் இ-சேவை மையங்களும் மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இருப்பினும், சான்றிதழ்கள் பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கைக்காக தேவையான பிறப்பு, வருவாய், சாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் தாமதமாக கிடைப்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிரமங்களை சந்தித்து வந்தனர்.
இந்த சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக அரசு தற்போது ‘நம்ம அரசு நம்ம கையில்’ என்ற புதிய டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசின் 20 துறைகளில் உள்ள 66 முக்கிய சேவைகள் பொதுமக்களுக்கு நேரடியாக செல்போன் வாயிலாக கிடைக்கவுள்ளன.
இந்த சேவையை பெற 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘வணக்கம்’ அல்லது ‘ஹாய்’ என பதிவு செய்தால் போதும். தமிழில் சேவையை பயன்படுத்த ‘டி (T)’ என்றும், ஆங்கிலத்தில் சேவையை பெற ‘இ (E)’ என்றும் பதிவிட வேண்டும். பின்னர் தேவையான துறையை தேர்வு செய்தவுடன் அதற்கான சேவைகள் உடனடியாக கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கூடுதல் உதவிகளுக்காக 18004256000 என்ற உதவி எண்ணையும் தொடர்புகொள்ளலாம். பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாக பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனுடன், மின்கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, தொழில் உரிமம் உள்ளிட்ட பல்வேறு கட்டண சேவைகளையும் செல்போன் வழியாகவே பயன்படுத்த முடியும்.
மேலும், பொதுமக்கள் தாங்கள் விண்ணப்பித்த மனுக்களின் நிலையை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, எந்த இடத்தில் இருந்தும் எந்த நேரத்திலும் மிக எளிதாக இந்த சேவைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Just sending hi WhatsApp enough From caste and income certificates current bills Tamil Nadu government Namma Arasu Namma Kaiya action plan