நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.! - Seithipunal
Seithipunal


தேர்தலை நியாயமாக நடத்தவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை வரும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிமீறல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான பதிவுகள் பகிரப்பட்டு வருவது தொடர்பாக  சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, இன்று தேர்தல் பிரச்சாரம் முடிவடைகின்ற நிலையில், திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வியை சந்திக்க இருக்கும் நிலையில், கழகத்திற்கு மக்கள் வெற்றியைத் தேடித்தருகின்ற சூழ்நிலையில், அந்த வெற்றியைப் பறித்து விடவேண்டும் என்ற நோக்கில்  ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாத அத்தனை அநியாயங்களையும் திமுக இன்றைக்கு அரகேற்றி வருகிறது என்று கூறினார். 

வேட்பாளர்கள் கடத்தல், வாக்காளர்களுக்குப் பணம் அளித்தல், வேளச்சேரி, தாம்பரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கையும் களவுமாகப் பிடித்தாலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் தேர்தல் பறக்கும் படை சோதனைகள் செய்தாலும், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும், பறக்கும் படையைப் பொறுத்தவரையில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் பதுங்கும் படையாகத்தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

அது பறக்கும் படையாக செயல்படாமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் பரிசு பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் பதுக்கிவைத்து, வாக்காளர்களுக்கு லஞ்சம் அளிக்கும் வகையில், அதனுடன் பணத்தை வழங்கும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

இது போன்ற விதிமுறை மீறல்களை எதிர்க்கட்சியான நாங்கள் முறையாகத் தகவல் அளித்தும் கூட, தேர்தல் ஆணையமும், தேர்தல் நடத்தும் அலுவலரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எங்களுடைய சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பல சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து இவர்கள் செய்யும், ஜனநாயக அத்துமீறல்கள், அநியாயங்களை புகாராக தெரிவித்தும் கூட தேர்தல் ஆணையம் இதனைத் தட்டி கேட்காமல், வழக்குப் போடாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு, ஒரு செயலற்ற ரோபோ பொம்மைபோல இன்றைக்கு தேர்தல் ஆணையம் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.

ரோபோ பொம்மையாக செயல்படும் தேர்தல் ஆணையத்தின் ரிமோட் கண்ட்ரோல் திமுக தலைவர் ஸ்டாலினிடம் உள்ளது என்றும், அவர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் அந்த ரோபோ பொம்மை கேட்கும் என்றும் தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கைக் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கொங்கு மண்டலத்தில் ரவுடிகள் இறக்கி விடப்பட்டுள்ளதைப்போல, சென்னையிலும் ரவுடிகள் இறக்கி விடப்பட்டுள்ளார்கள் என்றும், அவர்கள் இன்றைக்கு பூத்தை கைப்பற்றுதல், கலவரத்தை ஏற்படுத்துதல் போன்ற செயல்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். 

இதனை எல்லாம் தடுக்கவேண்டும் என்று எங்களுடைய சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்கள் என்றும், இனியும் காலம் தாழ்த்தாமல் மாநில தேர்தல் ஆணையமும் சரி, காவல்துறையும் சரி, நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

காவல் ஆணையரிடம் புகார் அளித்தது தொடர்பாக பேசிய ஜெயக்குமார், சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் தலா 25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வாக்குகள் இருக்கும் என்றும், குறிப்பிட்ட பூத்களில் கவனம் செலுத்தி பூத்தைக் கைப்பற்றுதல், குண்டர்களை வைத்து ஏஜெண்ட்டுகளை மிரட்டுவது, போன்ற செயல்களில் ஈடுபடப்போவதாக  தகவல்கள் வந்திருப்பதாகவும், இதனை முழுமையாக தடுத்து நிறுத்தி, ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல் ஆணையரிடம்  மனு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் காவல்துறையின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும், தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தவும், பாதுகாப்பு அதிகப்படுத்த வேண்டும் என்றும் காவல் ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறவில்லை என்றால் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar warning election commission


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->