'இந்திய வானில் புதிய விமான சேவை'; மூன்று நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்..!
The central government has approved three companies to provide new air services in Indian airspace
'அல் ஹிந்த் ஏர்', 'ப்ளை எக்ஸ்பிரஸ்' மற்றும் 'ஷாங்க் ஏர்' ஆகிய மூன்று புதிய விமான நிறுவனங்கள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்திய விமான போக்குவரத்து துறையில் இண்டிகோ விமான நிறுவனம் பெரும்பாலான வழித்தடங்களில் தனது சேவைகளை வழங்கி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டிசம்பர் மாதத் தொடக்கத்தில், இந்த நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடியால், நாடு முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இண்டிகோ விமான நிறுவன பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு கண்டது. இந்நிலையில், புதிய விமானங்கள் சேவையை தொடங்குவதற்கு, 'அல் ஹிந்த் ஏர்', 'ப்ளை எக்ஸ்பிரஸ்' மற்றும் 'ஷாங்க் ஏர்' ஆகிய 03 புதிய நிறுவனங்கள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, 'அல் ஹிந்த் ஏர்' மற்றும் 'ப்ளை எக்ஸ்பிரஸ்' ஆகிய நிறுவனங்களுக்கு இந்த வாரம் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 'ஷங்க் ஏர்' நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 'ஷங்க் ஏர்' உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவமனாகும் . இதன் சேவை 2026-இல் விமான சேவைகளை தொடங்கவுள்ளது. இது குறித்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது:
''பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகளால், உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துச் சந்தைகளில் ஒன்றாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை திகழ்கிறது.
பல விமான நிறுவனங்களை ஊக்குவிப்பதே அமைச்சகத்தின் நோக்கமாக இருந்து வருகிறது. 'உடான்' போன்ற திட்டங்கள், 'ஸ்டார் ஏர்', 'இந்தியா ஒன் ஏர்', 'ப்ளை91' போன்ற சிறிய விமான நிறுவனங்கள் உள்நாட்டு விமான நிலையங்களை இணைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. '' என்று தெரிவித்துள்ளார்.
குறித்த மூன்று விமான நிறுவனங்களிடம் இருந்தும் வழித்தடங்கள் மற்றும் பயன்படுத்தவிருக்கும் விமானம் குறித்து மத்திய அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. குறித்த நிறுவனங்கள் அறிக்கையை சமர்பித்த பிறகு விரைவில் இந்திய வானில் மூன்று புதிய விமான நிறுவனங்களும் தனது சேவையை தொடங்கும் என கூறப்படுகிறது.
English Summary
The central government has approved three companies to provide new air services in Indian airspace