தமிழ் மீடியம் மாணவர்களுக்கு ஜாக்பாட்...! தமிழ்வழிப் படிப்புக்கு 20% அரசு வேலை ஒதுக்கீடு...! - ஆளுநர் அர்லேகர் அதிரடி ஒப்புதல்!
Jackpot Tamil medium students 20percentage government job quota Tamil medium studies Governor Arlekar swift approval
தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத முன்னுரிமை வழங்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், இனி புதிதாக மேற்கொள்ளப்படும் அரசு பணி நியமனங்களில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான சட்டப்பூர்வ நடைமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களில் தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத இடங்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் நடைமுறை கடந்த 2010-ம் ஆண்டு சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.
இதன்படி, விண்ணப்பதாரர் ஏற்கெனவே அரசு பணியில் உள்ளாரா என்பதைக் கருத்தில் கொள்ளாமல், தமிழ்வழியில் கல்வி பயின்றவர் என்ற அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது.

நீதிமன்றத் தீர்ப்பால் மாறிய நடைமுறை
இதற்கிடையே, ஏற்கெனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் தமிழ்வழியில் கல்வி பயின்றவர்கள் என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை சலுகையை கோர முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதனால், தமிழ்வழிக் கல்விக்கான முன்னுரிமை வழங்கும் நடைமுறையில் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான புதிய சட்டத்திருத்த மசோதா கடந்த ஜனவரி மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
2010-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதிக்குப் பிறகு தமிழ்வழிக் கல்வி அடிப்படையில் அரசுப் பணியில் சேர்ந்தவர்களின் நியமனத்தை உறுதி செய்வதுடன், இனி புதிதாக அரசு பணியில் சேருபவர்களுக்கு மட்டுமே இந்த முன்னுரிமைச் சலுகை வழங்கும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
கவர்னர் ஒப்புதல்
இந்த நிலையில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத முன்னுரிமை வழங்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் மூலம், இனி புதிதாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களுக்கு மட்டுமே திருத்தப்பட்ட சட்டம் நடைமுறைக்கு வரும். ஏற்கெனவே நடைபெற்ற பணி நியமனங்களுக்கு இந்தப் புதிய திருத்தம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும்
முதல் வகுப்பு முதல் அரசு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரையிலான முழுக் கல்வியையும் தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு படித்தவர்கள் மட்டுமே இந்த முன்னுரிமையைப் பெற தகுதியுடையவர்கள்.
பிற மொழிகளை பயிற்றுமொழியாகக் கொண்டு படித்துவிட்டு, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் இந்த முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் வரமாட்டார்கள்.
பிற மாநிலங்களில் படித்தவர்களுக்கும் வாய்ப்பு
முதல் வகுப்பில் சேராமல், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8-ம் வகுப்புகளுக்கு இடையில் வயதின் அடிப்படையில் நேரடியாக பள்ளியில் சேர்ந்து, தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு கல்வி பயின்று தேர்ச்சி பெற்றவர்களும் முன்னுரிமை பெற தகுதியுடையவர்கள்.
அதேபோல், பிற மாநிலங்களில் தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு கல்வி பயின்று, பின்னர் தமிழகத்தில் தாங்கள் சேர்ந்த வகுப்பிலிருந்து தொடர்ந்து தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களும் இந்தச் சலுகையைப் பெறலாம்.
சான்றிதழ் கட்டாயம்
அரசுப் பணிக்குத் தேவையான கல்வித் தகுதி வரையிலான படிப்புகள் அனைத்தையும் தமிழ்வழியில் பயின்றதை நிரூபிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலிருந்தும் தமிழ்வழிக் கல்வி சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதன் மூலம் தமிழ்வழியில் முழுமையாக கல்வி பயின்றவர்களுக்கு மட்டுமே அரசுப் பணியில் வழங்கப்படும் 20 சதவீத முன்னுரிமை கிடைக்கும் வகையில் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
English Summary
Jackpot Tamil medium students 20percentage government job quota Tamil medium studies Governor Arlekar swift approval