தவெகவில் செங்கோட்டையனுக்கு தொடர் அவமதிப்பா? – அப்போவே சொன்னோமே.. திமுகவ ஃபாலோ பண்ண சொல்லி..புலம்பும் ஆதரவாளர்கள்!
Is Sengottaiyan being continuously insulted in Tvk We said it right then DMK supporters are crying when they tell them to follow
அதிமுகவை விட்டு விலகி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து சில வாரங்களே ஆன நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சிக்குள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கட்டுப்பாடுகள், அவருடன் இணைந்த ஆதரவாளர்களுக்கு இதுவரை எந்தப் பொறுப்புகளும் வழங்கப்படாதது, மேலும் விஜயை நேரில் சந்திப்பதற்கே தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக பேசப்படும் சூழல், செங்கோட்டையனையும் அவரது ஆதரவாளர்களையும் பெரும் அதிருப்திக்குள் தள்ளியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறிய செங்கோட்டையன், தவெகவில் இணைந்தபோது அவருக்கு “மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்” என்ற பதவி வழங்கப்பட்டது. இந்த இணைப்பு, தவெகவில் அனுபவமிக்க மூத்த அரசியல்வாதிகள் இணைவதாகக் கருதப்பட்டு ஆரம்பத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் அதன் பின்னர் நடந்த சம்பவங்கள், செங்கோட்டையனுக்கு எதிர்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை என்ற எண்ணத்தை வலுப்படுத்தியுள்ளன.
தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ள பிரசாரக் குழு பட்டியலில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முதலிடத்திலும், தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இரண்டாம் இடத்திலும் இடம்பெற்ற நிலையில், நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையனுக்கு மூன்றாம் இடம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுவே அவரது ஆதரவாளர்கள் மத்தியில் “மூத்த தலைவருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை” என்ற கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தவெகவில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொள்ள வேண்டுமென்றாலும், புஸ்ஸி ஆனந்த் மூலமாக மட்டுமே அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெகவில் இணைந்ததும் கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஒரு மாவட்டச் செயலாளரை நேரடியாக தொடர்பு கொண்டபோது, அழைப்பை அவர் ஏற்கவில்லை என்றும், பின்னர் புஸ்ஸி ஆனந்த் மூலமாகவே அந்த தொடர்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுவே செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதேபோல், கட்சியின் ஆலோசனைக் கூட்டங்களில் செங்கோட்டையனுக்கு பேசுவதில் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு கூட்டத்தில் எம்.ஜி.ஆர். குறித்துப் பேசியபோது, “இங்கே எல்லாமே விஜய் தான்; அவரைப்பற்றியே பேசுங்கள்” என்று வியூக வகுப்பாளர் ஒருவர் கூறியதாகவும், மற்றொரு கூட்டத்தில் சிபிஐ விசாரணை மற்றும் ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் குறித்து டெல்லியில் உள்ள தன் தொடர்புகளை பயன்படுத்திப் பேச முயன்றபோது, “கொஞ்சம் வெளியே இருங்கள்” என்று அவரை வெளியே அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், செங்கோட்டையன் தவெக தலைமைக்கு அளித்த தனது ஆதரவாளர்களின் பட்டியலை கூட கருத்தில் கொள்ள வேண்டாம் என்று உத்தரவு வழங்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் பின்னர், பனையூர் கட்சி அலுவலகத்தில் விஜயை சந்திக்க செங்கோட்டையன் பல மணி நேரம் காத்திருந்தும் சந்திப்பு கிடைக்கவில்லை என்றும், வீட்டிற்கு சென்றபோதும் “அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் வரக்கூடாது” என்று சொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொடர் சம்பவங்களால் மனம் உடைந்த செங்கோட்டையன், சொந்த ஊருக்கு சோகத்துடன் திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், திமுக உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகளில் இருந்து அவருக்கு அழைப்புகள் வந்ததாகவும், “புதிய கட்சியில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை” என அவரது ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே குறைபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலுக்கு முன்பே வேறு அரசியல் பாதையை யோசிக்கலாம் என்ற கருத்துகள் கூட அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில், தவெகவில் சீனியர் தலைவர்களை எவ்வாறு கையாளப்படுகிறது என்ற கேள்வியை செங்கோட்டையன் விவகாரம் மீண்டும் அரசியல் அரங்கில் எழுப்பியுள்ளதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
English Summary
Is Sengottaiyan being continuously insulted in Tvk We said it right then DMK supporters are crying when they tell them to follow