“ஆபாசமாக பேச வைப்பதுதான் திமுகவின் கடைசி ஆயுதமா?” – ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!
Is making people speak obscenely the DMK last resort Minister Nirmal Kumar barrage of questions to Stalin
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து, அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்துகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தன்னையும், தங்களது தலைவரான முதலமைச்சர் விஜய்யையும் குறித்து திமுகவினர் ஆபாசமாக பேசுவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இதுதான் திமுகவின் கடைசி அரசியல் ஆயுதமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட பதிவில், “மேடை போட்டு என்னைப் பற்றியும், எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா ஸ்டாலின்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “நேற்று ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்களை, குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதை எப்போது உணர்வீர்கள்?” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
திமுகவை நோக்கி ஊழல், துரோகம் மற்றும் பொய்கள் தொடர்பாக கேள்விகள் எழும்போதெல்லாம், அக்கட்சி வன்முறை அல்லது ஆபாச பேச்சை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
“தரமற்ற திமுகவினரின் பேச்சுகளை அவர்களது இல்லத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் காட்ட முடியுமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த மக்கள் தற்போது விஜய் மூலம் மீண்டும் அரசியலுக்குள் வந்துள்ளதாகவும், அரசியலில் நடைபெறும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களால் கண்காணிக்கப்படுவதாகவும் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், “குழந்தைகள், பெண்களின் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை, நாங்கள் என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.
திமுக திருந்துவதற்கு வாய்ப்பில்லை என்றும், தமிழக அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை மக்கள் விரைவில் எழுதுவார்கள் என்றும் நிர்மல் குமார் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இதனுடன், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கூறியதாக குறிப்பிடப்படும் “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே” என்ற கருத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதற்காக திமுக ஆர்ப்பாட்டம்?
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் பேசிய விதத்தையும், அவரது உடல் மொழியையும் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பி ஆ.ராசா பேசிய கருத்து பின்னர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “கொலஸ்ட்ரால் ரத்தத்தில் இருக்கலாம்; மூளையில் இருக்கக்கூடாது” என விமர்சித்த அவர், ஸ்டாலின் மிசா கைது தொடர்பாக விஜய் தெரிவித்த கருத்துகளை சுட்டிக்காட்டி, அவரது பிறப்பு குறித்து கேள்வி எழுப்பும் வகையில் பேசியிருந்தார்.
ஆ.ராசாவின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
“என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை” – ஆ.ராசா
இதுதொடர்பாக ஆ.ராசா வெளியிட்ட பதிவில், தியாகத்தில் உருவான ஒரு தலைவரின் அடையாளத்தையும் உண்மையையும் திட்டமிட்டு பொய் என கொச்சைப்படுத்தி ஏளனம் செய்ததால் ஏற்பட்ட வலியை உணர்த்தும் வகையில், உணர்ச்சியின் உந்துதலில் எதிர்தரப்பினரின் அடையாளம் மற்றும் உண்மை குறித்து கேள்வி எழுப்பியதாக தெரிவித்துள்ளார்.
“அதில் எனக்கும் வருத்தம்தான். என் வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில், “நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” என்றும் ஆ.ராசா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா பேசிய சர்ச்சைக்குரிய கருத்தும், மறுபுறம் அதற்கு நிர்மல் குமார் அளித்துள்ள கடுமையான பதிலும் தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
English Summary
Is making people speak obscenely the DMK last resort Minister Nirmal Kumar barrage of questions to Stalin