அதிமுக பிளவின் பின்னணியில் லீமா ரோஸ்? ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததே லீமா ரோஸ் தானாம்! அன்றே வார்னிங் கொடுத்த கே.சி. பழனிசாமி!
Is Leema Rose behind the AIADMK split It was Leema Rose who gave the sketch KC Palaniswami who gave the warning on the same day
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், லால்குடி தொகுதி எம்.எல்.ஏ லீமா ரோஸின் பெயர் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, எஸ்.பி. வேலுமணி – சி.வி. சண்முகம் அணிக்கும் தவெகவுக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் நெருக்கத்திற்கு லீமா ரோஸ்தான் முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், வேலுமணி – சண்முகம் அணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தற்போது வெளிப்படையான மோதலாக மாறியுள்ளது. சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து வாக்களித்தது இந்த பிளவை உறுதிப்படுத்தியது.
இந்த சூழலில், தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே அதிமுக – தவெக கூட்டணி குறித்து முதன்முதலில் கருத்து தெரிவித்தவர்களில் லீமா ரோஸும் ஒருவர் என்பது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய ஜனநாயகக் கட்சியில் இருந்து பின்னர் அதிமுகவில் இணைந்த லீமா ரோஸ், எஸ்.பி. வேலுமணி அணியுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் நடைபெற்ற முக்கிய அரசியல் ஆலோசனைகளிலும் லீமா ரோஸ் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகம் அலுவலகத்திற்கு முதல்வர் விஜய் சென்றபோது, அங்கு லீமா ரோஸும் இருந்ததாக கூறப்படுவது அரசியல் விவாதத்தை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், அதிமுக முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமி கடந்த ஏப்ரல் மாதமே லீமா ரோஸ் குறித்து எச்சரித்திருந்த வீடியோ மற்றும் பேட்டிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அப்போது அவர் கூறியதாவது:“அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பதவி கொடுத்து கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அளவுக்கு லீமா ரோஸுக்கு செல்வாக்கு இருக்கிறது. பாஜக கண்ணசைக்கும் நேரத்தில் அதிமுகவில் பெரிய மாற்றங்கள் நடந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை” என்று எச்சரித்திருந்தார்.
மேலும், “மார்ட்டின் மனைவி லீமா ரோஸை அதிமுகவில் சேர்த்தது வரலாற்றுப் பிழை. இது எதிர்காலத்தில் கட்சிக்கே பெரிய பிரச்சனையாக மாறும்” என்றும் அவர் கூறியிருந்தார்.
தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் தவெகவுடன் உருவாகியுள்ள அரசியல் சமன்பாடுகள் காரணமாக, கே.சி. பழனிசாமியின் அந்த எச்சரிக்கை மீண்டும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
English Summary
Is Leema Rose behind the AIADMK split It was Leema Rose who gave the sketch KC Palaniswami who gave the warning on the same day