திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க தவெகவுடன் காங்கிரஸ் ரகசிய பேச்சுவார்த்தையா?காங்கிரஸ் மேலிட புள்ளிகள் கணக்கே வேறயாம்!
Is Congress secretly negotiating with Thaweka to pressure DMK The Congress top brass is counting points differently
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி அரசியல் சூடு பிடித்துள்ளது. திமுக கூட்டணியில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் காங்கிரஸ் கட்சி, இந்த முறை அதிக தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கோரிக்கை வைத்து அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
வரவிருக்கும் தேர்தலில் 41 சட்டமன்றத் தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் தரப்பு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் திமுக தரப்பில் அதிகபட்சமாக 27 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் வழங்கலாம், அதற்கு மேல் வாய்ப்பில்லை என்ற நிலைப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் இதுவரை முன்னேற்றம் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக கார்டை விளையாடுகிறதா காங்கிரஸ்?
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியில் பங்கு வழங்க தயாராக இருப்பதாக முன்பு தெரிவித்திருந்தது. இதனை அடிப்படையாக கொண்டு காங்கிரஸ் தரப்பில் சிலர் தவெகவுடன் தொடர்பில் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ராகுல் காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியதாக தகவல் வெளியாகியது. அதேபோல், விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் சமூக வலைதளங்களில் “ஆட்சியில் பங்கு” குறித்து பதிவு செய்து திமுகவை மறைமுகமாக சுட்டிக்காட்டியதும் கவனம் பெற்றது.
அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன?
காங்கிரஸ் தலைமை இன்னும் திமுக கூட்டணியில் இருப்பதிலேயே உறுதியாக உள்ளது என கூறப்படுகிறது. கூட்டணி சலசலப்புகளுக்கு இடையே திமுக எம்.பி கனிமொழி ராகுல் காந்தியை சந்தித்து பேசியதும், பின்னர் கூட்டணி குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டியில், “தவெக எங்களை வெளிப்படையாக கூட்டணிக்கு அழைத்துள்ளது” என்று தெரிவித்தார். மேலும், “அரசியலில் அனைவரிடமும் பேசுவது இயல்பு. தகவல் தொடர்பு ஒருபோதும் நின்றுவிடாது” என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் கூட்டணி தொடர்பான குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.
கேரளா கணக்கு?
டெல்லியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒருதரப்பு, கேரள சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு விஜய்யுடன் இணைவது பயனுள்ளதாக இருக்கலாம் என மதிப்பிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் விஜய்க்கு உள்ள ரசிகர் ஆதரவை அரசியல் பலமாக மாற்றலாம் என சிலர் கணக்கு போடுவதாக கூறப்படுகிறது.
தவெக நம்பிக்கை
இதேவேளை, காங்கிரஸ் இறுதியில் தங்களுடனே கூட்டணி அமைக்கும் என தவெக நிர்வாகிகளும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
மொத்தத்தில், திமுக-காங்கிரஸ் இடையேயான சீட் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தவெக கார்டு அரசியல் அழுத்தமாக பயன்படுத்தப்படுகிறதா? அல்லது உண்மையிலேயே புதிய கூட்டணி உருவாகுமா? என்பது வரும் நாட்களில் தெளிவாகும்.
English Summary
Is Congress secretly negotiating with Thaweka to pressure DMK The Congress top brass is counting points differently