விஜய்க்கு செக் வைக்கும் காங்கிரஸ்? ஆதரவை வாபஸ் பெற டெல்லி ஆலோசனை.. தவெக அரசுக்கு புதிய நெருக்கடி!
Is Congress planning a checkmate for Vijay Delhi deliberates on withdrawing support A new crisis for the TVK government
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தவெக, அடுத்தகட்டமாக தேசிய அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, 2029 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சித் தலைவர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவும், கட்சியின் பெயரை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றி நாடு முழுவதும் களமிறங்கவும் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, சுமார் 100 மக்களவைத் தொகுதிகளை குறிவைத்து கட்சியை விரிவுபடுத்த தவெக திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த தேசிய அரசியல் நகர்வு தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் மேலிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை முழுமையாகப் பெறவில்லை. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் நீடித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், தமிழகத்தில் காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சியை நடத்திக்கொண்டே, தேசிய அளவில் ராகுல் காந்திக்கு மாற்றாக விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது காங்கிரஸ் மேலிடத்திற்கு ஏற்புடையதாக இல்லை என கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பில் விஜய் தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததாக வெளியான தகவல்களும், வடமாநிலங்களில் விஜய்யை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் இணையப் பிரச்சாரங்களும் காங்கிரஸ் தலைமையின் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், “ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்காக நாங்கள் கட்சி தொடங்கவில்லை; 1996-ம் ஆண்டு தேவகவுடா பிரதமரானதைப் போன்ற அரசியல் சூழல் உருவானால், 2029-ல் விஜய்யை பிரதமராக்குவதே இலக்கு” என தவெக தரப்பில் தெரிவிக்கப்படும் கருத்துகளும் காங்கிரஸ் மேலிடத்தின் அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தேசிய அரசியலில் ராகுல் காந்தியின் தலைமைக்கு எதிரான நிலைப்பாட்டை தவெக எடுத்தால், தமிழகத்தில் விஜய் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றால், சட்டப்பேரவையில் விஜய் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகலாம். இந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் நிலையில், தமிழக அரசியலில் புதிய குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உருவாகலாம்.
இதனால் விஜய் தலைமையிலான தவெகவுக்கு தற்போது முக்கியமான அரசியல் சவால் உருவாகியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியை பாதுகாப்பதா அல்லது 2029 நாடாளுமன்றத் தேர்தலை இலக்காக வைத்து தேசிய அரசியலில் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதா என்ற இரு முனைத் தீர்மானத்தை கட்சி எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸின் இந்த எச்சரிக்கை தவெகவின் தேசிய அரசியல் திட்டத்திற்கு தடையாக அமையுமா? அல்லது ஆதரவு வாபஸ் பெறும் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் விஜய் தனது ‘தேசிய வெற்றி கழகம்’ திட்டத்தை முன்னெடுப்பாரா? தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகளை தீர்மானிக்கப்போகும் முக்கிய கேள்வியாக இது மாறியுள்ளது.
English Summary
Is Congress planning a checkmate for Vijay Delhi deliberates on withdrawing support A new crisis for the TVK government