உளவுத்துறை அறிக்கை விவகாரம்: ஜான் ஆரோக்கியசாமியின் முக்கியத்துவம் குறைகிறதா? சைலண்டாக விஜய் போட்ட ஆர்டர்!
Intelligence Report Issue Is John Arokiasamy Importance Waning Vijay Quiet Directive
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றிக்குப் பின்னால் முக்கிய வியூக வகுப்பாளராகக் கருதப்பட்ட ஜான் ஆரோக்கியசாமியின் அரசியல் செல்வாக்கு குறைந்து வருகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதற்கு காரணமாக, உளவுத்துறை அறிக்கைகள் தொடர்பாக முதல்வர் விஜய் பிறப்பித்ததாக கூறப்படும் புதிய உத்தரவு பேசுபொருளாகியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களின் மனநிலையை கணித்து மைக்ரோ அளவிலான தேர்தல் திட்டங்களை வகுத்தது, விஜயின் பிரச்சார பாணி, உடல்மொழி மற்றும் இரு தொகுதிகளில் போட்டியிடும் முடிவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் முடிவுகளின் பின்னணியில் ஜான் ஆரோக்கியசாமி இருந்ததாக கட்சிக்குள் பேசப்பட்டது.
திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை ரீதியான எதிரியாகவும் முன்னிறுத்திய அரசியல் வியூகமும், தவெக வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.
தமிழக அரசியலில் உளவுத்துறை அறிக்கைகள் எப்போதும் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை, மக்கள் மனநிலை, அரசியல் கட்சிகளின் உள்நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய இந்த அறிக்கைகள், தினமும் முதலமைச்சருக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
நடைமுறையின்படி, இந்த ரகசிய அறிக்கைகளை முதலில் முதலமைச்சர் மட்டுமே பார்வையிட வேண்டும். பின்னர் அதில் இடம்பெறும் விவகாரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுவது வழக்கமான நடைமுறையாக உள்ளது.
ஆனால், சில அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின் படி, இந்த உளவுத்துறை அறிக்கைகள் முதலமைச்சரின் பார்வைக்கு செல்வதற்கு முன்பாகவே, அவரது ஆலோசகராகக் கருதப்படும் ஜான் ஆரோக்கியசாமி அவற்றைப் பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் முதல்வர் விஜயின் கவனத்திற்கும் சென்றதாகவும், அதன் பின்னர் அவர் உளவுத்துறைக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, "உளவுத்துறை அறிக்கைகள் முதலில் முதலமைச்சரின் பார்வைக்கே வர வேண்டும்; இடைப்பட்ட நிலையில் வேறு யாருக்கும் அவற்றைப் பார்வையிட அனுமதி வழங்கக் கூடாது" என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த உத்தரவு, அரசின் ரகசிய தகவல்கள் கையாளப்படுவது தொடர்பாக அதிகார வரம்புகளை தெளிவுபடுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ஜான் ஆரோக்கியசாமியின் அதிகார வரம்புகள் குறித்து புதிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
எனினும், இந்த விவகாரம் தொடர்பாக அரசின் தரப்பிலோ, ஜான் ஆரோக்கியசாமி தரப்பிலோ எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
அதனால், ஜான் ஆரோக்கியசாமியின் அரசியல் மற்றும் நிர்வாக முக்கியத்துவம் குறைந்து வருகிறதா, அல்லது இது வெறும் நிர்வாக நடைமுறையை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.
English Summary
Intelligence Report Issue Is John Arokiasamy Importance Waning Vijay Quiet Directive