பிகார் தேர்தல்: இண்டி கூட்டணியில் தலைவருக்கு எதிராக சம்பவம் செய்த ஒரே ஒரு வேட்பாளர்!
India alliance RJD Bhihar election
பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணிக்குள் தொகுதி ஒப்பந்தம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், கூட்டணியிலேயே கட்சிகள் ஒருவருக்கொருவர் எதிராகப் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக தர்பங்கா கவுரா பவுராம் தொகுதி குறித்து ஏற்பட்ட குழப்பம் இதற்குச் சான்றாகியுள்ளது.
இந்த தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் முன்பே, ராஷ்டிரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) சார்பில் அப்சல் அலிகான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கட்சி தலைமையினர் அவருக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்களையும் வழங்கினர். இதனால் உற்சாகமடைந்த அப்சல் அலிகான் பிரசாரம் தொடங்கினார்.
ஆனால் சில மணி நேரங்களுக்குப் பிறகு, அந்த தொகுதி இந்தியா கூட்டணியில் உள்ள விகாஷீல் இன்சான் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்தக் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ் சாகினியை கூட்டணி ஆதரிக்கும் என்றும் கூறப்பட்டது. இதனால் ஆர்.ஜே.டி. தலைமையினர் அப்சல் அலிகானை தொடர்பு கொண்டு, வழங்கப்பட்ட ஆவணங்களைத் திருப்பி அளிக்க கேட்டனர். ஆனால் அவர் மறுத்து, ஆர்.ஜே.டி. வேட்பாளராகவே மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில், அப்சல் அலிகானுக்கு தாங்கள் ஆதரவு அளிக்கவில்லை என்று ஆர்.ஜே.டி. தெளிவுபடுத்தியது. ஆனால் அவர் முறையான ஆவணங்களுடன் மனுதாக்கல் செய்திருந்ததால், அவரது வேட்புமனுவை நிராகரிக்க முடியாது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் விளைவாக, அந்த தொகுதியில் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் தமது கட்சியின் பெயரில் போட்டியிடும் வேட்பாளரை எதிர்த்து பிரசாரம் செய்ய வேண்டிய அவல்நிலை உருவாகியுள்ளது. இது இந்தியா கூட்டணிக்குள் கடும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
India alliance RJD Bhihar election