தவெக எம்.எல்.ஏக்களின் கல்வித்தகுதியில் முரண்பாடுகள்? கல்வித் தகுதியில் ரீல் சுற்றும் தவெக எம்எல்ஏக்கள்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
Inconsistencies in the educational qualifications of MLAs Tvk MLAs are spinning a reel in their educational qualifications
தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏக்களின் கல்வித்தகுதி தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. தவெக சார்பில் வெற்றி பெற்ற பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கல்வித்தகுதி குறித்து தவறான அல்லது முரண்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளதாக “இன்ஸ்கூப்” (Inscoop) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் வெற்றி பெற்ற 108 எம்.எல்.ஏக்களில் 67 சதவீதம் பேர் பட்டதாரிகள் எனக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் 6 பேர் பிஎச்.டி., 22 பேர் முதுகலை பட்டதாரிகள், 5 பேர் ஐஐடி படித்தவர்கள், 8 பேர் எம்பிபிஎஸ் மருத்துவர்கள், மேலும் 40 பேர் வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் என பிரசாரம் செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில், அந்த தகவல்களில் பல முரண்பாடுகள் இருப்பதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனின் கல்வித்தகுதி மீதான விவாதம் சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. அவர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், 2010ஆம் ஆண்டு வணிக மேலாண்மை மற்றும் வணிக மேலாண்மை பட்டயப் படிப்பு முடித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அவர் படித்ததாகக் கூறப்படும் கல்வி நிறுவனத்திற்கு அரசு அங்கீகாரம் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதேவேளை, தன்னை “ஏழை பின்னணியில் இருந்து வந்தவன்” என பேட்டி அளித்திருந்த ராஜ்மோகன், அண்மையில் சென்னை பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்பிலான சொகுசு வீடு வாங்கியதாக பரவி வரும் தகவல்களும் அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளன.
இன்ஸ்கூப் வெளியிட்டதாக கூறப்படும் ஆய்வில், 10-க்கும் மேற்பட்ட தவெக எம்.எல்.ஏக்களின் கல்வித்தகுதி விவரங்களில் வேறுபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி:
தாம்பரம் எம்.எல்.ஏ சரத்குமார் – பிபிஏ படித்திருந்தும், எம்பிஏ பட்டதாரி என பிரசாரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தஞ்சை எம்.எல்.ஏ விஜய் சரவணன் – 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தும், பிபிஏ பட்டதாரி என விளம்பரப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு.
ஆவடி எம்.எல்.ஏ ரமேஷ்குமார் – பி.ஏ படித்திருந்தும், “டாக்டர்” பட்டத்தை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
விருதுநகர் எம்.எல்.ஏ செல்வம் – டிப்ளமோ படித்த நிலையில், “டாக்டர்” பட்டம் பயன்படுத்துவதாக தகவல்.
கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் – சட்டப்படிப்பு முடித்ததாக தெரிவித்திருந்தாலும், “டாக்டர்” பட்டம் பயன்படுத்துவது கேள்விக்குறியாகியுள்ளது.
குமாரபாளையம் எம்.எல்.ஏ விஜயலட்சுமி – 12ஆம் வகுப்பு மட்டுமே படித்திருந்தும், பி.காம் பட்டதாரி என கூறப்படுவதாக குற்றச்சாட்டு.
போளூர் எம்.எல்.ஏ அபிஷேக் – மென்பொருள் பொறியாளர் என கூறியிருந்தாலும், எம்.எஸ் மற்றும் எம்பிஏ படித்ததாகவும் கூறியிருப்பதாக தகவல்.
அம்பத்தூர் எம்.எல்.ஏ பாலமுருகன் – 10ஆம் வகுப்பு வரை படித்திருந்தும், டிப்ளமோ படித்ததாக விளம்பரங்களில் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக சார்பில் வெற்றி பெற்ற 108 எம்.எல்.ஏக்களின் கல்வித்தகுதி விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
அதேநேரத்தில், “70 பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்” என்ற தவெக தரப்பின் கூற்றிலும் முரண்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. ஆய்வின்படி, வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே தலித் வேட்பாளர்கள் போட்டியிட்டதாகவும், அதில் 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தவெக அல்லது சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்கள் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
English Summary
Inconsistencies in the educational qualifications of MLAs Tvk MLAs are spinning a reel in their educational qualifications