முஸ்லிம் லீக் கட்சியை கூட்டணியில் வச்சுகிட்டு எப்படி மதச்சார்பற்ற கூட்டணி? ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்! விளாசிய தமிழிசை!
How can it be a secular alliance when the Muslim League is part of it It like having one foot in the river and the other in the mud Tamizhisai lashes out
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” குறித்து பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தவெக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. அதேநேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
கூட்டத்தின் முடிவில் தவெக தலைமையிலான கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என பெயர் சூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூட்டணி பெயர் தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், மதச்சார்பின்மை என்பது ஒரு கூட்டணியின் பெயரில் வைத்துக்கொள்ளும் அடையாளம் மட்டுமல்ல என்றும், அனைத்து மதங்களையும் சமமாக அணுகும் கொள்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள கூட்டணியை எவ்வாறு “மதச்சார்பற்ற கூட்டணி” என்று அழைக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கின்றனவா அல்லது இல்லையா என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலத்தில் ஒரு கூட்டணி, தேசிய அளவில் வேறு கூட்டணி என்ற நிலைப்பாடு “ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்” என்பதுபோல் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், 2029ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு கூட காங்கிரஸ் தரப்பில் தெளிவான பதில் இல்லை என்றும், மாணிக்கம் தாகூர் போன்ற தலைவர்களே இதுகுறித்து தெளிவான பதிலை தெரிவிக்க முடியாத நிலை இருப்பதாகவும் தமிழிசை கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்ட காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்தவர்கள் வைகோ மற்றும் திருமாவளவன் என்று குறிப்பிட்ட தமிழிசை, தற்போது அதே காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணியில் அவர்கள் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அன்று கொள்கை, இன்று கூட்டணி அரசியலா?” என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.தவெக கூட்டணி மாநில உரிமைக்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தின் முக்கியமான மாநில உரிமையான காவிரி நீர் உரிமையை காங்கிரஸ் தமிழகத்திற்கு உறுதியாக பெற்றுத் தரவில்லை என்றும் தமிழிசை விமர்சித்துள்ளார்.அப்படியிருக்கும்போது, மாநில உரிமையை காப்பாற்றுவோம் என்று மக்களிடம் எப்படி கூற முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, இந்த கூட்டணி உண்மையில் மதச்சார்பற்ற கூட்டணியா, சமூகநீதிக்கான கூட்டணியா அல்லது மாநில உரிமைக்கான கூட்டணியா என்பது குறித்து அந்த கூட்டணியில் உள்ளவர்களிடமே தெளிவான பதில் இல்லை என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
கொள்கையில் குழப்பம், கூட்டணியில் குழப்பம், பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் குழப்பம், மாநில உரிமையில் தோல்வி என பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், தவெக தலைமையிலான புதிய கூட்டணியை “குழப்பமான கூட்டணி” என்றே பார்க்க வேண்டிய நிலை இருப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
அவரது இந்த கடுமையான விமர்சனம், தவெக தலைமையிலான கூட்டணி பெயர் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
How can it be a secular alliance when the Muslim League is part of it It like having one foot in the river and the other in the mud Tamizhisai lashes out