அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி முடிவா? அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்!மீண்டும் பலம் பெறும் அதிமுக!
Has Edappadi Palaniswami decided to reunite the AIADMK He is ready for talks with dissidents AIADMK set to regain its strength
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்கவும், கட்சிக்குள் தன் மீது அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல் அக்கட்சியில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற வேண்டுமெனில், கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகள் சிலர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அந்த கட்சிக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த அரசியல் மாற்றம் அதிமுகவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியின் தலைமைதான் காரணம் என விமர்சனம் செய்து அதிமுகவில் இருந்து விலகிய சில முக்கிய நிர்வாகிகள், தற்போது தவெகவில் இணைந்துள்ளனர். மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, வெள்ளமண்டி நடராஜன் உள்ளிட்ட முக்கிய முகங்கள் தவெகவில் இணைந்திருப்பது அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று அமைச்சர் பதவியை பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் சில முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் மரகதம் குமரவேல் மற்றும் விஜயபாஸ்கர்களுக்கு தவெக தரப்பில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, நீதிமன்றத்தின் மூலம் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனுமதியை பெறும் முயற்சிகளில் தவெக அரசு ஈடுபடலாம் என்றும், அதன் பின்னர் தேர்தலை சந்திக்க முன்னாள் அதிமுக நிர்வாகிகள் தயாராகி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த சூழலில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரும் வழக்கமான அரசியல் பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் காலங்களில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை இதுபோன்ற கூட்டம் நடத்தப்படவில்லை.
இதற்கு முக்கிய காரணமாக, எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு சுமார் 20 எம்எல்ஏக்கள் வரை ஆதரவாக இருப்பதாக கூறப்படும் தகவலை அதிமுகவினர் சுட்டிக்காட்டுகின்றனர். எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டால் அந்த அணியினர் பங்கேற்காமல் போகும் பட்சத்தில், அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு வெளிப்படையாக தெரிந்துவிடும் என்பதால் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், செல்போன் மூலமாக எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு சட்டப்பேரவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் சிவி சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சில முக்கிய அதிமுக தலைவர்கள் தவெக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமியின் கருத்துகளுக்கு அவர்கள் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமா, சம்பந்தப்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கலாமா என்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏக்களிடம் ஆலோசனை கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே அதிமுக வட்டாரங்களில் மற்றொரு முக்கியமான தகவலும் உலா வருகிறது. அதிமுகவில் இருந்து ஏற்கனவே பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சியை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளலாம் என்பதே அந்த தகவல்.
டிடிவி தினகரன் தென் மாவட்டங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிருப்தியாளர்களுடன் பேசி வருவதாக கூறப்படும் நிலையில், அதிமுகவின் வாக்கு வங்கிக்கு மேலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என சில மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.
சசிகலா உள்ளிட்டோருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும், நீண்ட காலமாக கட்சிக்கு வெளியே இருக்கும் கே.சி. பழனிசாமி உள்ளிட்டவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவது குறித்தும் எடப்பாடி பழனிசாமியிடம் சில சீனியர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், விழுப்புரத்தில் சிவி சண்முகம், கோவையில் எஸ்.பி. வேலுமணி போன்ற வலுவான தலைவர்கள் அதிருப்தியுடன் தொடர்ந்து செயல்படுவது அல்லது வேறு அரசியல் கட்சிகளுக்கு செல்வது அதிமுகவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என மூத்த நிர்வாகிகள் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சியின் அடிமட்ட கட்டமைப்பில் ஏற்படும் எந்தவொரு பிளவும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், தற்போதைய அதிருப்தியை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதையடுத்து, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களுடனும், தற்போது அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளுடனும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் கட்சியை வலுப்படுத்துவதற்கும், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சரிசெய்வதற்கும் முக்கியத்துவம் அளித்துவிட்டு, அதன் பின்னர் செயற்குழு, பொதுக்குழு உள்ளிட்ட கட்சி சார்ந்த விவகாரங்களை கவனிக்கலாம் என்பதே எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய திட்டமாக இருக்கலாம் என அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்க முடியுமா, அதிருப்தியில் உள்ள தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்துவாரா, பிரிந்து சென்றவர்களில் யார் மீண்டும் அதிமுக பக்கம் திரும்புவார்கள் என்பதே அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளாக எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Has Edappadi Palaniswami decided to reunite the AIADMK He is ready for talks with dissidents AIADMK set to regain its strength