தவெக வெற்றியால் அமித் ஷாவின் தமிழக வியூகம் மாற்றம்? ரெடியாகும் பாஜக மேலிடம்! தமிழக பாஜகவை மறுசீரமைக்க அமித் ஷா புது கணக்கு!
Has Amit Shah Tamil Nadu strategy changed due to Tvk victory BJP leadership is ready Amit Shah has a new plan to restructure the Tamil Nadu BJP
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிரடி வெற்றி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வகுத்திருந்த தமிழக அரசியல் வியூகங்களை முற்றிலும் மாற்றியமைத்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அமித் ஷா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியடைந்த பின்னர், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்த அணியாக களமிறங்கியது. அந்தத் தேர்தலில் பாஜக 11 சதவீத வாக்குகளையும், கூட்டணி 18 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தாலும், திமுக கூட்டணி தமிழகத்தின் 39 தொகுதிகளையும் கைப்பற்றியது.
இதையடுத்து, “அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் குறைந்தது 20 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம்” என பாஜக மற்றும் அதிமுக தரப்பிலிருந்து அமித் ஷாவிடம் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னரே, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை டெல்லி தலைமை எடுத்ததாக தகவல்கள் வெளியாகின.ஆனால், இந்த முழு அரசியல் கணக்கையும் தவெகவின் அதிரடி எழுச்சி முற்றிலும் சிதைத்துவிட்டதாக தற்போது கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக முக்கிய தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, ஆரம்பத்தில் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என அமித் ஷா நம்பியிருந்தாராம். ஆனால் தேர்தல் நெருங்கியபோது தவெக பெரிய அளவில் வாக்குகளை பெறும் என்பது தெரியவந்ததாகவும், இருந்தாலும் தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு வெற்றி பெறும் என அவர் எதிர்பார்க்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த ஆலோசனையில், “கிறிஸ்துவர் வாக்குகளில் 80 சதவீதமும், முஸ்லிம் வாக்குகளில் 60 சதவீதமும் தவெகவுக்கு சென்றுள்ளது. இதனால் திமுக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இனி சிறுபான்மை வாக்குகள் மீண்டும் திமுகவுக்கு திரும்புமா என்பது சந்தேகமே. அதேபோல் அதிமுகவும் தற்போதைய சூழலில் அந்த வாக்குகளை ஈர்க்கும் நிலையில் இல்லை. இதனால் தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கான புதிய அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளது” என சில தலைவர்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையெல்லாம் கவனமாக கேட்ட அமித் ஷா, “அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். சில மாதங்கள் அமைதியாக இருந்து அரசியல் நிலவரங்களை கவனிப்போம். அதன் பிறகு தமிழக பாஜகவை மறுசீரமைப்பது உள்ளிட்ட அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கலாம்” என தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
பாஜக மேலிடத்தின் இந்த அமைதியான அணுகுமுறை சாதாரண அரசியல் மௌனம் அல்ல; மாறாக நீண்டகால அரசியல் கணக்கீட்டின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி சிதறியுள்ளதும், அதிமுக உட்கட்சிப் பிரச்சினையில் சிக்கியிருப்பதும், தவெக ஆட்சியின் ஆரம்பகட்ட செயல்பாடுகளும் கவனிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், தமிழகத்தில் பாஜக தனித்து வளர வேண்டுமா? அல்லது மீண்டும் கூட்டணி அரசியலுக்குத் திரும்ப வேண்டுமா? என்ற கேள்விகளும் டெல்லி தலைமையில் விவாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், தமிழக அரசியலில் அடுத்த சில மாதங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கப்போகிறது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
English Summary
Has Amit Shah Tamil Nadu strategy changed due to Tvk victory BJP leadership is ready Amit Shah has a new plan to restructure the Tamil Nadu BJP