''பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழுவில் மத்திய அமைப்பின் பிரதிநிதித்துவத்தை கட்டாயப்படுத்துவது மாநில உரிமைகளுக்கு எதிரானது''; முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன்..! - Seithipunal
Seithipunal


''இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கட்டமைப்பின்படி, மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் மாநில அரசுக்கும் மாநிலச் சட்டங்களுக்கும் உட்பட்டதாகும். இதில் மத்திய அமைப்பின் பிரதிநிதித்துவத்தை கட்டாயப்படுத்துவது மாநில உரிமைகளுக்கு எதிரானதாகும்'' என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ம.ராசேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

''மாநிலப் பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநிலச் சட்டங்களின் கீழ் நிறுவப்பட்டு, அவற்றின் நிர்வாகம், துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் அந்தச் சட்டங்களின்படியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

இந்நிலையில், துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உறுப்பினரைச் சேர்ப்பதற்கு மாநில அரசு இசைவு தெரிவித்திருப்பது உடனடியாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல் குழுவின் அமைப்பு அந்தந்த பல்கலைக்கழகச் சட்டங்களில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்பை மாற்ற வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட சட்டத்தில், சட்டப்பேரவை மூலம் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். நிர்வாக இசைவு அல்லது அரசாணை மூலம் சட்டத்தின் அடிப்படை அமைப்பை மாற்ற இயலாது.

உரிய சட்டத் திருத்தம் செய்யாமல் தேடல் குழுவில் வெளிப்புற ஒழுங்குமுறை அமைப்பின் பிரதிநிதியை கட்டாயமாகச் சேர்ப்பது பல்கலைக்கழகத் தன்னாட்சியைக் குறைக்கும். இது சட்டப்பேரவையின் அதிகாரத்துக்கு அறைகூவல் விடும் செயலாக அமையும். இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கட்டமைப்பின்படி, மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் மாநில அரசுக்கும் மாநிலச் சட்டங்களுக்கும் உட்பட்டதாகும்.

இதில் மத்திய அமைப்பின் பிரதிநிதித்துவத்தை கட்டாயப்படுத்துவது மாநில உரிமைகளுக்கு எதிரானதாகும். யுஜிசி என்பது உயர் கல்வித் தரநிலைகளை வகுத்து, மானியங்கள் வழங்கி, ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை வெளியிடும் அமைப்பாகும்.

ஆனால், மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிர்வாக நியமனங்களில் நேரடி உறுப்பினராக இருப்பது அதன் முதன்மைப் பொறுப்பின் எல்லையைத் தேவையின்றி விரிவுபடுத்துவதாகும்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி பல்கலைக்கழகச் சட்டங்களும் நிர்வாக மரபுகளும் உள்ளன. அனைத்துக்கும் ஒரே மாதிரியான தேடல் குழு அமைப்பை விதிப்பது மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்றதாக இருக்காது.

மத்திய அமைப்பின் பிரதிநிதியை நியமிப்பதில் ஏற்படும் தாமதம், துணைவேந்தர் நியமனத்தையும் தாமதப்படுத்தி, பல்கலைக்கழக நிர்வாகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மாநிலச் சட்டத்தில் குறிப்பிடப்படாத உறுப்பினரைத் தேடல் குழுவில் சேர்த்து மேற்கொள்ளப்படும் நியமனங்கள் நீதிமன்றங்களில் சவாலுக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

உயர் கல்வித் தரத்தை உறுதிப்படுத்துவது அவசியமானதே. ஆனால் அதற்காக மாநில அரசின் சட்டப்பூர்வ அதிகாரங்களும் பல்கலைக்கழகத் தன்னாட்சியும் பாதிக்கப்படக் கூடாது.

உயர் கல்வித் தரநிலைகளும் மாநில உரிமைகளும் சமநிலையுடன் பாதுகாக்கப்படும் வகையிலான நடைமுறைகளே ஏற்றதாகும். இத்தகைய காரணங்களினால், மாநில பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில், யுஜிசி உறுப்பினரை நியமிப்பதற்கு இசைவு தரும் போக்கினை தமிழக அரசு உடனடியாக கைவிட்டு, மாநில உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என கல்வியாளர்கள் சார்பில் வலியுறுத்துகிறேன்''என்று அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Vice Chancellor M Rasendran says including a UGC member in the search committee for the university vice-chancellor is against state rights


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->