பாரபட்சமானது.. 'கரூர், விராலிமலை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்'; முன்னாள் எம்எல்ஏ-க்கள் வழக்கு..!
Former MLAs file a case demanding that the ban on holding by elections in Karur and Viralimalai constituencies be lifted
கரூர் மற்றும் விராலிமலை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி முன்னாள் எம்எல்ஏக்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி,விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இடைத்தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 05 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த கடந்த ஜூலை மாதம் விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வரும் ஆகஸ்ட் 24 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில், கரூர் மற்றும் விராலிமலை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''கரூர், விராலிமலை உள்ளிட்ட 05 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரி பாஜக வழக்கறிஞர் வெங்கடாஜலபதி அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கரூர் மற்றும் விராலிமலை தொகுதிகளின் உண்மை நிலவரங்களை கருத்தில் கொள்ளாமல், எங்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பாமல் 05 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை விதித்து இருப்பது பாரபட்சமானது.
எனது பதவியை ஜூன் 16-அம் தேதியே ராஜினாமா செய்துவிட்டேன். அதை சட்டப்பேரவைத் தலைவரும் உடனடியாக ஏற்றுக்கொண்ட நிலையில், எனது வெற்றியை எதிர்த்து மறுநாள் ஜூன் 17-ஆம் தேதிதான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் முன்னதாகவே விராலிமலை தொகுதி காலியாகி விட்டதால் தொகுதி மக்களின் நலன்கருதி இடைத்தேர்தல் நடத்த வேண்டியது அவசியமானது.''என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்ததாக கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;
''கரூர் உள்ளிட்ட 05 தொகுதிகளுக்கு எதிராக தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக இந்த 05 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்தை தடுப்பது சரியல்ல. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அத்தொகுதி மக்கள் பெருத்த பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இது ஏற்புடையதாக இருக்காது.
அனுமானங்களின் அடிப்படையில் வழக்கறிஞர் வெங்கடாஜலபதி தொடர்ந்த பொதுநல வழக்கில் அனுமானங்களின் அடிப்படையிலேயே உயர் நீதிமன்றமும் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனவே கரூர், விராலிமலை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்.'' என குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.
English Summary
Former MLAs file a case demanding that the ban on holding by elections in Karur and Viralimalai constituencies be lifted