''பதுங்கி கொண்ட ஓநாய்கள் எல்லாம், இன்றைக்கு SIR-ஐ எதிர்ப்பதாக ஓலமிடுகின்றன'': அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விமர்சனத்திற்கு ரகுபதி பதிலடி..! - Seithipunal
Seithipunal


''SIR நடவடிக்கையை ஆதரித்த அதிமுக பங்கேற்காமல் போனதில் ஆச்சரியமில்லை. ஆனால், SIR-ஐ எதிர்ப்பதாக சொன்ன தவெக பங்கேற்காமல் பதுங்கி கொண்ட ஓநாய்கள் எல்லாம், இன்றைக்கு SIR-ஐ எதிர்ப்பதாக ஓலமிடுகின்றன'' என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விமர்சனத்திற்கு முன்னாள் அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பான சமூக வலைதள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

ஞானேஷ் குமாருக்கு வக்காலத்து, எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பா? அம்பலமாகும் தவெக நாடகம்! திமுக எஸ்.ஐ.ஆரைக் கட்டுப்படுத்தியிருந்தால் ஆட்சியை இழந்தது ஏன்? எஸ்.ஐ.ஆரை எதிர்த்தது யார், ஒளிந்தது யார்..?

தமிழ்நாட்டில் SIR-ஆல் மக்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்க தி.மு.க.வினர் பாடுபட்டதை பாராட்டும் விதமாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் எங்கள் தலைவர் பேசியதை ஒட்டி, வெட்டி போட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாக்கூர் திமுகவிடம் பதிலடியாக வாங்கி கட்டிக் கொண்டார்.

அந்த ’கால் அமுக்கி’ மாணிக்கம் தாகூருக்கு விழுந்த வசவுகளுக்கு ஒத்தடம் கொடுக்க ஓடி வந்திருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. SIR விவகாரத்தில் திமுக எதையும் செய்யவில்லை? பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டது என்றெல்லாம் கதைகளை கட்டவிழ்த்திருக்கிறார்.

முன்ன பின்ன பேப்பர் படிச்சிருந்தானே ஆதவ் அர்ஜுனாவுக்கு இதெல்லாம் தெரியும்! அப்படி தெரியவில்லை என்றால் எங்கள் கூட்டணியில் வெற்றி பெற்று உங்கள் கூட்டணியில் சேர்ந்திருக்கும் கல்லா பெட்டி கூட்டணியினரான காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் கட்சியினரை கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.

இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டு வந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைக்கு (Special Intensive Revision - SIR) எதிராக திமுக மேற்கொண்ட தொடர் முயற்சிகள், சட்டப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும் சாட்சிகளாக இருந்தவர்கள் இன்றைக்கு தவெக கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் தலைவர்கள்தான். SIR-ஐ திமுக எதிர்க்கவில்லை என்றால், அவர்களும் எதிர்க்கவில்லை என்றுதானே அர்த்தம்! இப்போது கள்ள மவுனம் காப்பவர்கள் யார்? என்பது நாடறியும்.

2025 அக்டோபரில் தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைக்கு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இவ்வளவு பெரிய பணியைச் செய்வது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். பீகார் மாநிலத்தைப் போல லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் என்று குற்றம் சாட்டி கூட்டறிக்கை வெளியிட்டது.

SIR-க்கு 2025 நவம்பர் 2 அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 46 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அதில் பங்கேற்றனர்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் SIR நடைமுறைக்கு எதிராக ஒருமனதாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு எடுக்கப்பட்டது.

பீகாரில் சிறுபான்மையினர் மற்றும் பாஜக அல்லாத 65 லட்சம் வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்பட்டது போல, தமிழகத்திலும் செய்யத் திட்டமிடும் தேர்தல் ஆணையத்திற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

SIR பணியை உடனடியாகத் திரும்பப் பெற்று 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு போதிய கால அவகாசம் வழங்கி வெளிப்படைத்தன்மையுடன் மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பருவமழைக் காலப் பாதிப்பால் மக்கள் படிவங்களை சமர்ப்பிப்பதில் பெரும் சிரமம் ஏற்படும் என்பதால் அந்த காலகட்டத்தில் பணியைச் செய்யக் கூடாது என திமுக அறிவுறுத்தியது.

2025 நவம்பரில் SIR-க்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

SIR நடைமுறைக்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 2025 நவம்பர் 11 அன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.

2025 டிசம்பரில் SIR நடைமுறைக்கு எதிரான தங்களின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து திமுக, விடுபட்ட மற்றும் முறையற்ற முறையில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் பணிகளைத் தீவிரப்படுத்த தங்களின் பூத் ஏஜென்ட்டுகளுக்கு அறிவுறுத்தியது.

நாடாளுமன்றத்தில் SIR நடைமுறைக்கு எதிராகத் தங்களின் கடுமையான எதிர்ப்புக் குரலை திமுக எம்.பி-கள் பதிவு செய்தனர். பீகாரில் SIR-ஆல் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதை நாடாளுமன்ற விவாதங்களில் திமுக எம்பிக்கள் ஆதாரமாக முன்வைத்துக் கடுமையான கேள்விகளை எழுப்பினர்.
SIR-ஐ கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இணைந்து தொடர் கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தினர்.

இப்படி SIR விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு வெட்டவெளிச்சமாக இருந்த போது திமுக எதையும் செய்யவில்லை என கதை கட்டுகிறார்கள். SIR விவகாரத்தில் தவெக என்ன செய்தது?

SIR-க்கு எதிராக திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக பங்கேற்கவில்லை. SIR நடவடிக்கையை ஆதரித்த அதிமுக பங்கேற்காமல் போனதில் ஆச்சரியமில்லை. ஆனால், SIR-ஐ எதிர்ப்பதாக சொன்ன தவெக பங்கேற்காமல் பதுங்கி கொண்ட ஓநாய்கள் எல்லாம், இன்றைக்கு SIR-ஐ எதிர்ப்பதாக ஓலமிடுகின்றன.

SIR நடைமுறைக்கு எதிரான திமுகவின் சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான களப் போராட்டங்களை பட்டியல் போட்டிருக்கிறோம். இதே போல தவெக-வால் ஒரு பட்டியலை காட்ட முடியுமா? 2025 நவம்பர் 16 போராட்டமும் உச்ச நீதிமன்ற மனுவும் தவிர தவெக என்ன செய்தது?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கடந்த மாதம் சென்னையில் போராட்டம் நடத்திய போது தவெக ஏன் பங்கேற்கவில்லை? அதுபற்றி கேட்ட போது அமைச்சர் ராஜ்மோகன், ’’ஞானேஷ் குமாரை நீக்கும் கோரிக்கையைத் திசைதிருப்பும் தந்திரம். ஆழமான பிரச்சினையிலிருந்து கவனத்தைத் திருப்ப அவர் பலிகடா ஆக்கப்படுகிறார்’’ என்று ஞானேஷ்குமாருக்கு ஆதரவாக பம்மினாரே எதற்காக? டெல்லி எஜமான் கோபித்துக் கொள்வார் என திசைத் திருப்பியவர்கள் எல்லாம், இன்று SIR-ஐ எதிர்க்க கிளம்பிவிட்டார்கள். ஞானேஷ்குமாருக்கு வக்காலத்து வாங்கியவர்கள் எல்லாம் SIR-ஐ எதிர்க்கிறோம் என கபட நாடகம் ஆடுகிறார்கள்.

ஞானேஷ் குமாரைப் பதவி விலகக் கோரி, அவரைக் கைது செய்து வழக்குத் தொடர வேண்டும் என்று தமிழ்நாட்டில் போராட்டம் நடத்திய போது அவர்களை எல்லாம் இரும்புகரம் கொண்டு ஒடுக்கிய ஓடுகாலிகள், SIR-ஐ பற்றி பேசுவதற்கும் அதில் திமுகவை குற்றம் சாட்டுவதற்கும் என்ன அருகதை இருக்கிறது? டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் கைது செய்யப்பட்ட போது எங்கள் தலைவர் கடுமையாக எதிர்த்தார். தமிழ்நாட்டில் போராடியவர்கள் கைது செய்யப்பட்ட போது திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு கரம் நீட்டினார்கள்.

பாஜகவும் அவர்களுக்கு வேலை செய்யும் தேர்தல் ஆணையத்திற்கும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கும் கூலிப்பணி செய்கிறவர்கள்தான் விஜய் அமைச்சரவையில் இன்று அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

SIR-க்கு எதிராக காங்கிரஸும் தவெகவும் ஒன்றுபட்டிருக்கிறதா? ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தவெக எச்சரிக்கையாக SIR-ஐ எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டே நாடகம் ஆடுகிறது. அது நாடகம் என தெரிந்தும் காங்கிரஸ் முட்டு கொடுக்கிறது.

“BLO-க்கள் மாநில ஊழியர்கள் என்பதால் திமுக கட்டுப்பாட்டில் இருந்தது” என்கிறார் ஆதவ் அர்ஜுனா. எஸ்.ஐ.ஆர் தேர்தல் ஆணையத்தின் நடைமுறை. BLO-க்கள் தேர்தல் ஆணையத்தின் கீழ் செயல்படுபவர்கள். இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமலா அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இருப்பார்?

திமுக எஸ்.ஐ.ஆரைக் கட்டுப்படுத்தி வெற்றிக்காகப் பயன்படுத்தியது என்றால், திமுக ஆட்சியை இழந்தது ஏன்? தவெக ஆட்சியை பிடித்து எப்படி? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே சொன்னதுபடி எஸ்.ஐ,ஆரால் ஆட்சி மாற்றம் நடந்துவிட்டதா?

திமுகவும் பாஜகவும் ரகசியக் கூட்டணி துருப்பிடித்த ஆயுதத்தை தூக்கி கொண்டு வருகிறார் ஆதவ் அர்ஜுனா. பாஜகவும் திமுகவும் தமிழகத்தின் முக்கிய எதிரிகள் என்பது 6-ஆம் வகுப்பு மாணவனுக்கு கூட தெரியுமே! ஆதவ் அர்ஜுனாவுக்கு தெரியவில்லை என்றால் மூளையில் என்ன பிரச்னை? சரியான மருத்துவரை பாருங்கள் அமைச்சரே!

SIR படிவம் நிரப்ப திமுக உதவியதை ஜனநாயகப் படுகொலை என்றும் கட்சி முகவர்கள் (BLA) நியமிப்பது எல்லாக் கட்சிகளுக்கும் உள்ள சட்டபூர்வ வாய்ப்பு என்பதையும் அறியாத அளவுக்கு மக்கு சாம்பிராணியை அமைச்சரவையில் வைத்திருக்கிறார்களே! வாக்காளர்களுக்கு உதவுவது எல்லாக் கட்சிகளுக்கும் உள்ள சட்டபூர்வ உரிமை. தவெகவும் முகவர்களை நியமிக்கலாமே! இதில் எப்படி தவறு நடக்கும்!

வாக்காளர்களைக் காக்க திமுக உழைத்தது என்றும், நீக்கத்துக்கு உடந்தை என்றும் முரணாக பேசுகிறது ஆதவ் அர்ஜுனாவின் அறிக்கை. ஆட்சியில்தானே இருக்கிறீர்கள். அந்த SIR-ல் ஆதாரம் இருந்தால் இப்போதே வெளியிடுங்கள்.

எஸ்.ஐ.ஆரை நடத்தியது தேர்தல் ஆணையம். SIR-ஐ திமுக கட்டுப்படுத்தியிருந்தால் ஆட்சியை ஏன் இழந்தோம்? 'எஸ்.ஐ.ஆர் டிராமா'-வை நடத்திவிட்டு அதற்கு திமுகவின் லேபிளை ஒட்ட பார்க்கும் ஓட்டை வாய்களை மக்கள் அடைப்பார்கள். '' என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Minister Raghupathy hits back at Minister Aadav Arjunas criticism regarding SIR


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->