காமராஜர் பிறந்தநாள் விழாவில் பரபரப்பு; நெல்லையில் மூத்த எம்.பி முன்னிலையில் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர்கள் அடிதடி..!
Former Congress district leaders clash in the presence of senior MP at Kamaraj birthday party in Nellai
திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி. முன்னிலையிலேயே முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஒருவரையொருவர் சராமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விழாவிற்கு திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராமேஷ்வரன் தலைமை வகித்ததோடு, திருநெல்வேலி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்த நிலையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழாவில் முக்கிய நிகழ்வாக காமராஜர் சிலைக்கு முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து, நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது, திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சங்கர பாண்டியன் மற்றும் உமாபதிசிவன் ஆகியோருக்கு இடையே புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது தொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
முதலில் வாய்மொழியாக தொடங்கிய மோதல், சில நிமிடங்களிலேயே அடிதடிக்கு வரை சென்றதோடு, ஆத்திரமடைந்த இருவரும், எம்.பி ராபர்ட் புரூஸ் மற்றும் பிற காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னிலையிலேயே ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கி கொண்டனர். இப்படி வாக்குவாதம் கைகலப்பாக திடீரென மாறியதால் அங்கிருத்தன் ஏனைய நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் மற்ற நிர்வாகிகள் மற்றும் எம்.பி ஆகியோர் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கி வைத்துள்ளனர்.

காமராஜர் பிறந்த நாள் விழாவின்போது கட்சி அலுவலகத்திலேயே மூத்த நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் அங்கிருந்த தொண்டர்களிடையே அதிருப்தியையும், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
English Summary
Former Congress district leaders clash in the presence of senior MP at Kamaraj birthday party in Nellai