'சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்தில் வெளிப்படை தன்மையில்லை. ஏதோ கோளாறு உள்ளது': அரசு விளக்க வேண்டும்: இ.பி.எஸ் கோரிக்கை..!
EPS says there is no transparency in the appointment of DGP
அதிமுக பொது செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவது தேர்தல் பரப்புரையில் தீவிரமாக கலந்து கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அதன் அப்படி, இன்று திருவெறும்பூர், தஞ்சை பிரதான சாலை பஸ் ஸ்டாண்ட் அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசிய போது கூறியுள்ளதாவது:
திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதம் முடிந்துவிட்ட நிலையில், 2021 தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகள் அறிவித்தனர். ஆனால், அதில் 10% கூட நிறைவேற்றவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில், திமுகவினர் 98% நிறைவேற்றப்பட்டதாக பச்சைப் பொய் சொல்லி திரிகிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.
இது தொழிலாளர்கள் நிறைந்த பகுதி, அரிசி, புழுங்கல் அரிசி, இட்லி அரிசி, கடலெண்ணை, நல்லெண்ணை என அனைத்து விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அதை கட்டுப்படுத்த திமுக அரசுக்குத் திறமையில்லை என்று பேசியுள்ளார்.

அத்துடன், அவர் மேலும் குறிப்பிடுகையில், சமீபத்தில் அமைச்சர் நேரு அவர்கள், எம்ஜிஆருக்குத்தான் பெண்களிடத்தில் அதிக செல்வாக்கு இருந்தது, இப்போது ஸ்டாலினுக்கு இருக்கிறது என்று கூறினார். எம்ஜிஆருக்கு இணை வைத்து எவரும் பேச முடியாது என்றும், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் இருக்கிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை இரண்டே மாதத்தில் நிறைவேற்றினார்கள். ஆனால், தமிழகத்தில் அப்படியல்ல, ஓட்டுகளைப் பெறுவதற்கு அழகாகப் பேசுவார்கள். ஆட்சிக்கு வந்ததும் அந்தர்பல்டி அடிப்பார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் மத்தியில் திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. திமுக தோல்வியடைவது உறுதி, அந்த பயத்தில் தான் மகளிர் உரிமைத் தொகைக்கான விதியைத் தளர்த்தி கொடுக்கிறார் என்று இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சட்டம் ஒழுங்கு டிஜிபி 30-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். 03 மாதத்துக்கு முன்பாகவே பட்டியல் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும். அவர்கள் தான் மூவரை பரிந்துரைப்பார்கள். அவர்களில் ஒருவரை தேர்வு செய்வார்கள். இதில் என்ன தாமதம், உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. அதில் வெளிப்படைத்தன்மையில்லை. ஏதோ கோளாறு உள்ளது. என்ன காரணம் என்பதை திமுக அரசு விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த பகுதியைச் சேர்ந்த பள்ளிக் கல்வி அமைச்சர் அண்மையில் சட்டசபையில் பேசுகிறார், எந்த விதிமுறையும் இல்லாமல் மேல்நிலைப்பள்ளி அதிகமாக அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டதாகச் சொல்கிறார், பள்ளி திறப்பது தப்பா..? கல்வி கற்போர் எண்ணிக்கை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிமுக ஆட்சியில் மக்களுக்காக அரசாங்கம், திமுக ஆட்சியில் அரசாங்கத்துக்காக மக்கள். இதுதான் திமுக, அதிமுகவுக்கான வேறுபாடு என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
அத்துடன், இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. நமது முதலமைச்சர் கடன் வாங்குவதில்தான் சூப்பர் முதல்வர். திமுக ஐந்தாண்டு முடியும் தருவாயில் 05 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இப்படி கடன் வாங்கியதில் தான் சாதனை படைத்தது திமுக அரசு. இப்படி கடன் அதிகம் வாங்கும்போது வரி அதிகமாகும். வரி போட்டுத்தான் கடனை அடைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இது, ஜல்லிக்கட்டுக்குப் பேர் பெற்ற பகுதி. இங்கு ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும், வீரர்களுக்குப் போதிய பாதுகாப்பு உதவிகள் செய்யப்படும் என்று மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் உறுதியளித்துள்ளார்.
மேலும், சென்னையில் நேற்று பெய்த மழையால் மின்சார கேபிள் அறுந்து விழுந்ததில் கண்ணகி நகரில் வரலட்சுமி என்ற தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். இந்த அரசில் மின்சார வாரியம் சரியாகச் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதனால் ஒரு உயிர் பலியாகியிருக்கிறது என்று குற்றம் குமத்தியுள்ளார்.
அத்துடன், ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கையை ஏற்று, ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ரூ.75 ஆயிரம் மானியமாக கொடுக்கப்படும் என இபிஎஸ் தனது தேர்தல் வாக்குறுதியை கொடுத்துள்ளார்.
English Summary
EPS says there is no transparency in the appointment of DGP