சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட துறைகளில் பல்லாயிரம் கோடி கை மாறியது உண்மையா? திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும்: இபிஎஸ் கேள்வி..!
EPS says the DMK government should clarify whether it is true that billions of rupees have changed hands in sectors including the environment sector
சென்னையின் சுற்றுச்சூழலை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நாசகாரதிட்டத்திற்கு தமிழக வனத் துறை, வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட அரசு துறைகள் அனுமதி அளித்துள்ளதன் மர்மம் என்ன..? இதில் பல்லாயிரம் கோடி கை மாறியதாக வரும் செய்திகள் உண்மையா..? என்பதைதிமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; 'பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அதிகாரத்தை எப்படியேனும் கைப்பற்றி குடும்ப ஆதிக்கத்தை வளர்க்க நினைக்கும் மக்கள் விரோத திமுக அரசு, கடந்த 2006-2011 மைனாரிட்டி திமுக ஆட்சியின்போது கண்ணில் பட்ட சொத்துக்களை எல்லாம் கபளீகரம் செய்ததும், அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகார்களை விசாரிக்க 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் “நில அபகரிப்பு பிரிவு' என்ற தனிப் பிரிவை தமிழக காவல் துறையில் உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டதும் மக்கள் நன்கறிவார்கள்.
2021ல் விடியா திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் மீண்டும் தன்னுடைய பினாமி நிறுவனங்கள் மூலம் மக்கள் சொத்துக்களை மிரட்டி கபளீகரம் செய்வதுடன், அரசுக்குச் சொந்தமான நிலங்களையும் பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் கையூட்டு பெற்றுக்கொண்டு தாரை வார்க்கத் தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பருவமழைக் காலங்களில் சென்னையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வடி நிலமாகவும், பல்லுயிர் பெருக்கத்திற்கு இதயமாகவும் விளங்குகிறது.
எனது தலைமையிலான அரசு பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை மீட்டெடுக்க ஏற்கெனவே 16 கோடி ரூபாய் மதிப்பில் அனுமதிக்கப்பட்ட திட்டத்தை விரிவுபடுத்தி, மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.165.68 கோடி செலவில் “தேசிய பருவநிலை மாற்றத் தழுவல் நிதி”யின் கீழ், 695 ஹெக்டேர் சதுப்பு நிலத்தில் “பள்ளிக்கரணை சுற்றுச்சூழல் மீட்பு திட்டத்தினை” 2018-2019ல் செயல்படுத்த ஒப்புதல் வழங்கி, சதுப்பு நிலம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பள்ளிக்கரணை சதுப்புநிலம் “ராம்சார் ஒப்பந்தம்'-படி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாகும். இதன்படி “ராம்சார் அறிவிக்கை செய்யப்பட்ட சதுப்பு நிலத்திலோ, அல்லது அதன் எல்லையிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் எந்தவிதமான கட்டுமானங்களோ, சாலை கட்டுமானங்களோ மேற்கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது' என்று தென்மாநிலங்களுக்கான தேசிய பசுமை தீர்ப்பாயம் 24.9.2025 அன்று வழங்கிய தீர்ப்பினை சிஎம்டிஏ, தன்னுடைய அலுவலர்களுக்கு 6.10.2025 அன்று சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க சதுப்பு நிலங்கள் உயிர்நாடியாக திகழ்கின்றன என்ற காரணத்தினால், அவற்றை வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்பது ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நியதியாகும். இதை விடியா திமுக அரசு தளர்த்தி சுமார் 15 ஏக்கர் நிலத்தை “பிரிகேட்” என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு, 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 1250 குடியிருப்புகளை கட்ட அனுமதி வழங்கியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

என்னதான் நவீன தொழில்நுட்பத்துடன் சதுப்பு நிலத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டாலும், அக்கட்டிடத்தின் அஸ்திவாரங்கள் அமைவதும், அதன்மேல் எழுப்பப்படும் கட்டிடங்களின் உறுதித் தன்மையும் கேள்விக்குறியதே! என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு பெரும் வெள்ளத்திற்கும், புயலுக்கும் அக்கட்டிடங்கள் தாங்காது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இத்திட்டத்தில் திமுக அரசு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடுவதை ஏற்க முடியாது. சென்னையின் சுற்றுச்சூழலை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த நாசகாரதிட்டத்திற்கு தமிழக வனத் துறை, வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட அரசு துறைகள் அனுமதி அளித்துள்ளதன் மர்மம் என்ன ? இதில் தொங்கி நிற்கும் ஊழல் என்ன ? இதில் பல்லாயிரம் கோடி கை மாறியதாக வரும் செய்திகள் உண்மையா ? என்பதை இந்த திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
சென்னையை வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் அரணாகத் திகழக்கூடிய இந்த சதுப்பு நிலத்தில் எந்தவொரு கட்டுமான திட்டத்தையும் செயல்படுத்த இந்த அரசு அனுமதிப்பதை அதிமுக கை கட்டி வேடிக்கை பார்க்காது. அதிமுக அரசு அமைந்தவுடன் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.' என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
EPS says the DMK government should clarify whether it is true that billions of rupees have changed hands in sectors including the environment sector