எடப்பாடி பழனிசாமி புதிய வியூகம்.. தனி சேனல் ஆரம்பிக்கும் எடப்பாடி! எம்எல்ஏக்களுடன் ரகசிய ஆலோசனை! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவுக்குள் மீண்டும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும்போது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டுவது வழக்கம். ஆனால், இந்த முறை அந்தக் கூட்டம் நடைபெறவில்லை. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் எதிர்பாராத வெற்றியைப் பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் எனக் கூறி அதிமுகவைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்துள்ளனர். மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, வெள்ளமண்டி நடராஜன் உள்ளிட்ட முக்கிய முகங்கள் தவெக பக்கம் சென்றுள்ளனர்.

மேலும், இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று அமைச்சர் பதவியை பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் சிலர் தங்களது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் மரகதம் குமரவேல் மற்றும் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு தவெக அரசு பொறுப்புகளை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்படாதது அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதமாகியுள்ளது. எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு சுமார் 20 எம்எல்ஏக்கள் ஆதரவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், கூட்டம் கூட்டப்பட்டால் அவர்கள் பங்கேற்காமல் இருப்பார்கள். இதனால் அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு வெளிப்படையாக தெரிந்துவிடும் என்பதால் எடப்பாடி பழனிசாமி இந்த முறை கூட்டத்தை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், தனது ஆதரவு எம்எல்ஏக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் எவ்வாறு செயல்பட வேண்டும், எந்த விவகாரங்களில் பேச வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுபுறம், அதிமுகவைச் சேர்ந்த சிவி சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் சட்டசபையில் தவெக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் அவர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு மேலும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், தமக்கு எதிராக செயல்படும் எம்எல்ஏக்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் தொடர்பாகவும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஜெயலலிதா காலத்தில் ‘ஜெயா டிவி’ மற்றும் ‘நமது எம்.ஜி.ஆர்.’ ஆகியவை அதிமுகவின் முக்கிய ஊடகங்களாக செயல்பட்டன. பின்னர் கட்சியில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு ‘நியூஸ் ஜெ’ மற்றும் ‘நமது அம்மா’ உள்ளிட்ட ஊடகங்கள் உருவாகின.

தற்போது ‘நமது அம்மா’ மற்றும் ‘நியூஸ் ஜெ’ ஆகிய ஊடகங்களின் கட்டுப்பாடு எஸ்.பி. வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பில் இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமியுடன் அவர்களுக்கு மோதல் ஏற்பட்டுள்ளதால் அவரது நிகழ்வுகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு அந்த ஊடகங்களில் போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்றும் அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதனால் தனக்கென வலுவான ஊடகத் தளத்தை உருவாக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘போர்வாள்’ என்ற பெயரில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக தனி தொலைக்காட்சி சேனல் ஒன்றை தொடங்கவும் அவர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக சில முன்னாள் தொலைக்காட்சி ஆசிரியர்கள் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த முக்கிய நபர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவில் ஏற்கனவே தலைமைக்கு எதிரான அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், எம்எல்ஏக்கள் மத்தியில் உருவாகியுள்ள பிளவு, சட்டசபையில் வெளிப்படும் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் புதிய ஊடகத்தை உருவாக்கும் முயற்சி என அடுத்தடுத்து நகர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அதிமுகவில் அடுத்ததாக என்ன அரசியல் திருப்பம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami new strategy Edappadi to launch a dedicated channel Secret consultations with MLAs


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->