'அதிமுகவை அழிக்க நினைப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது; நமக்கு எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா உறுதுணையாக இருக்கும்'; எடப்பாடி பழனிச்சாமி..! - Seithipunal
Seithipunal


''கட்சியில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கட்சியை அழிப்பதற்கான செயல்களில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நமக்கு எப்பொழுதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது ஆன்மா உறுதுணையாக இருக்கும்'' என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

''எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய நாள் முதல் பல்வேறு சோதனைகளையும், துரோகங்களையும் சந்தித்து வெற்றி கண்டுள்ளார். தொடர்ந்து, ஜெயலலிதாவும் இதுபோன்ற பல்வேறு சோதனைகளையும், துரோகங்களையும் சந்தித்துதான் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஜெயலலிதா 1988, 1989 ஆண்டுகளில் பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும் சந்தித்தார்கள்.

குறிப்பாக 1996 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, அதிமுக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று சோதனையைச் சந்தித்தபோது, உடன் இருந்தே ஜெயலலிதாவுக்கு பல நேரங்களில் இழைக்கப்பட்ட துரோகங்களை துணிச்சலோடு எதிர்கொண்டு கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று, பல்வேறு சிறப்புகளைப் பெற்றுத் தந்தார்.

அந்த வகையில், நம் இரும்பெரும் தலைவர்களின் நல்லாசியோடும், உங்களின் ஒத்துழைப்போடும் ‘கட்சியின் பொதுச் செயலாளர்’ பொறுப்பினை ஏற்று, இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் நான், பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும், துரோகங்களையும், நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி தொண்டர்களின் துணையோடு எதிர்கொண்டு தொடர்ந்து பயணித்து வருகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக 47 இடங்களைப் பெற்ற நிலையில், கட்சியில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கட்சியை அழிப்பதற்கான செயல்களில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நமக்கு எப்பொழுதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது ஆன்மா உறுதுணையாக இருக்கும்.

கட்சியின் தற்போதையை நிலையை எண்ணி, தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும், அதிமுகவின் தீவிர விசுவாசியுமான மகேந்திரன் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அறிந்து என்னுடைய மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கிறது.

அதிமுகவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனையைக் கண்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் மனம் தளர வேண்டாம்; எவ்வித விபரீதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்கள் அனைவரையும் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாஆகிய நம் இருபெரும் தலைவர்கள்தான், சட்டமன்றத் தேர்தலில் தொடர் வெற்றியை கண்டவர்கள். வெற்றி, தோல்வி என்பது மாறி, மாறி வரும். அதிமுக தோல்வியை கண்டு துவண்டுவிடுவதுமில்லை. அந்தவகையில், தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், இந்நிலையில் இருந்து விரைவிலேயே மீண்டு, எதிர்வரும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெறும்.

அதிமுக தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு நிர்வாகிகளும், கோடானு கோடி தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

"எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ண திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்ற ஜெயலலிதாவின் எண்ணவோட்டத்தை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மெய்ப்பித்துக் காட்டுவோம்.

கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தற்போதைய சூழ்நிலையை எண்ணி எவ்வித அச்சத்துக்கும், பதற்றத்துக்கும் ஆளாக வேண்டாம் என்று மீண்டும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்'' என்று அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami asserts that the intentions of those seeking to destroy the AIADMK will never be realized


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->