தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து கலந்தாய்வு கூட்டம்: தவெக அரசு 'டேக் டைவர்ஷன்' அரசியலை மேற்கொள்ள வேண்டாம்; திமுக துரைமுருகன்..!
Duraimurugan says the government should not pursue a policy of take diversion
''நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக மட்டும் கூட்டம் கூட்டுவதை ஏற்க முடியாது.'' என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது;
''தமிழகத்தின் நலனையும், மாநிலத்துக்குரிய பிரதிநிதித்துவத்தையும் பாதிக்காத வகையில் நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு.
அதில் எந்த தடுமாற்றமும் திமுகவுக்கு இல்லை. முறையற்ற தொகுதி மறுசீரமைப்பால் இந்திய அளவில் ஏற்படவுள்ள ஆபத்தை முதன்முதலாக எடுத்துரைத்து, அதற்கு எதிரான வலுவான கருத்தை உருவாக்கி, ஒருமித்த குரல்களை ஒன்றிணைத்ததே திமுகவும், கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும்தான் என்பதை நாடறியும்.
எனவே, தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்று திமுகவுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை. தவெக அரசு ஆக.8-ம் தேதி (இன்று) அழைப்பு விடுத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் பங்கேற்று எங்களது கருத்தை தெரிவிப்பதில் எங்களுக்கு தயக்கம் இல்லை.
ஆனால் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக மட்டும் கூட்டம் கூட்டுவதை ஏற்க முடியாது.

தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக தமிழகத்துக்கான பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படக் கூடாது. பாதிக்கப்பட்டால் அதைத் தடுக்கும் முன்னணி படையாக திமுக இருக்கும்.
அதேநேரம் இதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட முனைப்பு காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்கவும், தமிழகத்தில் உள்ள கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற நிபந்தனையை தமிழக அரசிடம் திமுக முன்வைக்கிறது.
இன்றைய சூழலில் காவிரி உரிமையை மீட்பதும், மேகேதாட்டு அணையை தடுப்பதும் மிகமிக முக்கியமானவை. தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ள நிலையில், தவெக அரசு ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Duraimurugan says the government should not pursue a policy of take diversion