ஜனவரி 19-ல் நடக்கும் தேர்தல் - சந்தேகம் எழுப்பும் டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி வரை நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல் நடத்தப்படும் விதம் குறித்து மருத்துவர்கள் மத்தியில் பல்வேறு ஐயங்கள் எழுந்துள்ள நிலையில், அவற்றை போக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் இன்று வரை மேற்கொள்ளாதது ஐயங்களை அதிகரிக்கச் செய்துள்ளதாக, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் தலைவர், துணைத்தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிக்கு தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்  கடந்த செப்டம்பர் 14-ஆம்  தேதி அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இந்தத் தேர்தல் நியாயமாக நடைபெறுமா? என்பது குறித்து மருத்துவர்களிடையே பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவர்கள் எழுப்பிவரும் ஐயங்கள் சரியானவை என்று நம்புவதற்கு தேவையான காரணங்கள் இருப்பதை மறுக்க முடியாது.

தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் 92,198 மருத்துவர்கள் மட்டும் தான் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் பதிவு பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை 1.60 லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது. அவர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களில் சுமார் 70 ஆயிரம் பேரை தவிர்த்து விட்டு மீதமுள்ளவர்களை மட்டும் வைத்துக் கொண்டு தேர்தல் நடத்துவது நேர்மையானதாகவோ, அனைவருக்கும் சமவாய்ப்பு அளிப்பதாகவோ அமையாது என்பது தான் மருத்துவர்களின் புகார் ஆகும்.

தேர்தலில் வாக்களிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள முறை தான் கூடுதல் ஐயங்களை உருவாக்கியுள்ளது. ஓர் அமைப்புக்கு தேர்தலை நடத்தும் போது, அதற்கான வாக்குப்பதிவு நாளை அறிவித்து, அந்த நாளில் மாவட்ட அளவில் வாக்குச்சாவடிகளை அமைத்தோ அல்லது ஆன்லைன் முறையிலோ அனைவரும் வாக்களிக்கச் செய்வது தான் சரியானதாக இருக்கும்.

தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் சிலருக்கு  தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கலாம். ஆனால், இந்த தேர்தலில் அனைவருமே அஞ்சலில் தான் வாக்களிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வகையிலும் நியாயமல்ல.

மருத்துவக் கவுன்சில் தேர்தலில் வாக்களிக்க வரும் ஜனவரி மாதம் 19-ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்குள்ளாக அனைவரும் தங்களின் வாக்குகளை தபால் மூலம் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்பட்ட வாக்குகள் ஜனவரி 20-ஆம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் முறையில் வாக்களிக்கும் போது அதில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்புள்ளது;  அதிகாரமும், செல்வாக்கும் படைத்தவர்கள் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தி தங்களுக்கு சாதகமாகவும், எதிரானவர்களுக்கு பாதகமாகவும் வாக்களிக்கச் செய்யக்கூடும் என்று ஐயங்கள் எழுப்பப்படுகின்றன.

அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில், அதிகம் படித்தவர்களான மருத்துவர்களை அஞ்சல் முறையில் மட்டும் தான் வாக்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது  எந்த வகையில் நியாயமல்ல.

மருத்துவக் கவுன்சில் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தேவையான திருத்தங்களை ஆன்லைன் மூலம் செய்ய அனுமதிக்கும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில், அதற்கான தேர்தலையும் ஆன்லைன் முறையில் நடத்த முடியும். அதை செய்ய மருத்துவக் கவுன்சில் முன்வராதது ஏன்?

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் மிகுந்த அதிகாரம் பெற்ற அமைப்பாகும். அந்த அமைப்பின் நிர்வாகிகள் மிகவும் நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமித்து, ஆன்லைன் முறையில் வாக்களிக்கும் வகையில் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நடத்த தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss Say About TN Medical Council Election


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->