செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இந்தியில் பெயர்ப்பலகை அமைப்பதா? - மருத்துவர் இராமதாஸ் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் இந்தியும் திணிக்கப்பட்டு  இருக்கிறது. தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட நிறுவனத்தின்   பெயர்ப்பலகையில் கடந்த காலங்களில் இல்லாத வகையில் இந்தி திணிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் கடந்த ஆண்டு வரை தமிழக அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்திற்காக ரூ.24.65 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை நடப்பாண்டின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்கள். அந்த கட்டிட வளாகத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட பெயர்ப்பலகையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ற சொற்றொடர் முதலில் தமிழிலும், பின்னர் இந்தியிலும், மூன்றாவதாக ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் இல்லாத இந்தி இப்போது திணிக்கப்படுவதை ஏற்க முடியாது.

உலகின் மூத்த மொழியான தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கூட்டணி கட்சிகளின் கோரிக்கையை எற்று 14.10.2004 அன்று தமிழை செம்மொழியாக அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக செம்மொழி தமிழ் உயராய்வு மையம் என்ற அமைப்பு 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டு, மைசூரில் உள்ள இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்திற்கு தன்னாட்சி அதிகாரம்  வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ற பெயர் சூட்டப்பட்டது. 2008-ஆம் ஆண்டு மே 19 முதல் சென்னை சேப்பாக்கத்திலும், தரமணியிலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது.

தமிழ்நாடு அரசுக்கான கட்டிடங்களில் செயல்பட்டு வந்த போது, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பெயர்ப் பலகையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தவிர இந்திக்கு இடமளிக்கப் படவில்லை. ஆனால், பெரும்பாக்கத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்ட பிறகு பெயர்ப்பலகையில் இந்தி திணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இணையதளத்திலும் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான மொழித்திணிப்பு.

மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் பெயர்ப்பலகை அமைக்கப்  படுவது வழக்கம் என்ற வாதம் சிலரால் முன்வைக்கப்படலாம். ஆனால், அந்த வாதம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு பொருந்தாது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்றாலும், அது தமிழாராய்ச்சி என்ற தனித்துவமான நோக்கத்திற்காக  தொடங்கப்பட்டது என்பதால், அதன் பெரும்பான்மையான செயல்பாடுகள் தமிழக அரசையே சார்ந்துள்ளன.

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தலைவர் பதவியில் தமிழக முதலமைச்சர் தான் நியமிக்கப்படுகிறாரே தவிர, மத்திய நிறுவனம் என்பதால் மத்திய அமைச்சர்களோ, ஆளுனரோ நியமிக்கப்படுவதில்லை. தமிழாய்வு நிறுவனத்தின் ஆட்சிக்குழுவில் உள்ள 15 உறுப்பினர்களில் 9 பேர் தமிழக அரசின் பிரதிநிதிகள் ஆவர். இந்த நிறுவனத்தின் கட்டிடத்திற்கான நிலத்தை வழங்கியது தமிழக அரசு தான். அவ்வாறு இருக்கும் போது, தமிழாய்வு நிறுவனத்திற்கு இந்தியில் பெயர்ப்பலகை வைத்தது நியாயப்படுத்த முடியாத தவறு.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் கடந்த 14 ஆண்டுகளாக சென்னையில் செயல்பட்டு வருகிறது.  அந்த 14 ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் பெயரை இந்தியில் எழுத எந்த முயற்சியும் மேற்கொள்ளப்பட வில்லை. ஆனால், இப்போது திடீரென இந்தியில் பெயர்ப்பலகை வைப்பதன் நோக்கம், இந்தித் திணிப்பு என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். செம்மொழி நிறுவனத்தின் தலைவராக இருக்கும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இதற்காக ஒப்புதல் பெறப்பட்டதா? என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்ட செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்துவத்தை கருத்தில் கொண்டு, அதன் பெயர்ப்பலகையிலிருந்து இந்தி எழுத்துகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். செம்மொழி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி நிறுவனத்தின் தனித்துவத்தை காக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Central Institute of Classical Tamil Studies


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->