அதையெல்லாம் இடிச்சு தள்ளுங்க... தமிழக அரசை வலியுறுத்தும் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அரசு பள்ளிகளின் மேற்கூரைகள் சரிந்து விழும் நிகழ்வுகள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. மாநிலம் முழுவதும் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிகளை  இடித்து விட்டு, புதிய பள்ளிகளை கட்ட வேண்டும் என்று அரசு கொள்கை முடிவு எடுத்தும் கூட, அது இன்னும் செயல்படுத்தப்படாதது மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது என்று. பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார் . 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள எஸ்.களபம் கிராமத்தில்  செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நேற்று வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில்  பரத் என்ற நான்காம் வகுப்பு மாணவர் காயமடைந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அந்த பள்ளியின் கட்டிடங்கள் பலவீனமடைந்து இருப்பதாக அதிகாரிகளிடம் ஆசிரியர்கள் பல ஆண்டுகளாகவே புகார் செய்து வருவதாகவும், ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதேபோல், இராமநாதபுரம் முதுகுளத்தூரை அடுத்த ஆனைச்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த மாதம் 12-ஆம் தேதி மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததில் ஆசிரியர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இத்தகைய நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன. ஆனால், பள்ளிக்கட்டிடங்களை சீரமைப்பதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவது இல்லை.

மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். வகுப்பறைகளில் அவர்களுக்கு கல்வி வழங்கப் படுவதைக் கடந்து அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேன்டும். கடந்த ஆண்டு திசம்பர் மாதம் திருநெல்வேலியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கழிப்பறை இடிந்து விழுந்த விபத்தில் மாணவர்கள் மூவர் உயிரிழந்தது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அத்தகைய விபத்துகள் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் இனி நிகழக் கூடாது என்ற எண்ணத்தில், தமிழகம் முழுவதும் பழுதடைந்துள்ள உள்ள பள்ளிக்கட்டிடங்களை இடித்து விட்டு, புதிய கட்டிடங்களைக் கட்ட தமிழக அரசு ஆணையிட்டது. ஆனால், அதற்கான பணிகள் இன்னும் வேகம் பெறவில்லை.

தமிழ்நாடு முழுவதும் 9,573 பள்ளிகளில் உள்ள 13,036 கட்டிடங்கள் பழுதடைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்ததால், அவை அனைத்தையும் இடித்து விட்டு, புதிய பள்ளிக் கட்டிடங்களை கட்ட வேண்டும் என்பது தான்  தமிழக அரசின் திட்டம். ஆனாலும் கூட, கடந்த மே மாதம் வரை  3,482 பள்ளிகளில் 4,808 பழுதடைந்த கட்டிடங்கள் மட்டும் இடிக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  இன்னும் 6,033 பள்ளிகளில் உள்ள 8,228 கட்டங்கள் இடிக்கப்பட வேண்டும். இந்த பணிகளை செய்து முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை.

புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் அண்மையில் விபத்து நடத்த பள்ளிகள், ஏற்கனவே  இடித்து விட்டு கட்ட முடிவு செய்யப்பட்டிருந்த பள்ளிகள் பட்டியலில் இல்லை. இதன்மூலம் அரசால் இடித்து விட்ட கட்ட முடிவு செய்யப்பட்ட பள்ளிகளைத் தவிர மேலும் பல பள்ளிகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பது உறுதியாகிறது. இது மாணவர்களின் உயிருக்கான அச்சுறுத்தலை அதிகரிக்கிறது.

திருநெல்வேலியில் நிகழ்ந்தது போன்ற இன்னொரு விபத்தை தமிழகம் தாங்காது. எந்த திட்டங்கள் தடைபட்டாலும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு அனைத்து பள்ளி கட்டிடங்களும் வலிமையாக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். தமிழக அரசால் ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்ட பள்ளிக் கட்ட்டிடங்களை உடனடியாக இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டப் பட வேண்டும். அவை மட்டுமின்றி, சேதமடைந்துள்ள மற்ற கட்டிடங்களையும் உடனடியாக அடையாளம் கண்டு அவற்றுக்குப் பதிலாக புதிய கட்டிடங்களை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say Demolish old School Buildings in tn


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->