தமிழக அரசால் பலியான இரு உயிர்கள்.! வேதனையில் அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


இனியும் தாமதிக்காமல் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இளைஞரணித் தலைவருமான அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், 

"வேலூர் மாவட்டம் திருவலத்தை அடுத்த திருப்பாக்குட்டையில் தாத்தா குடித்து விட்டு வைத்த மதுவை பழச்சாறு என்று நினைத்து குடித்த மழலை உயிரிழந்ததும், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் தாத்தாவும்  உயிரிழந்து விட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் வேதனையளிக்கின்றன. தாத்தா, பெயரனை  இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவலம் அருகில் உள்ள திருப்பாக்குட்டை கன்னிக்கோயில் தெருவைச் சேர்ந்த தொழிலாளி சின்னசாமி.   தமது வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளார். மதுப்புட்டியில் இருந்த பெரும்பகுதி மதுவை குடித்து விட்டு, தொலைக்காட்சிப் பார்ப்பதற்காக அவர் சென்று விட்ட நிலையில், மீதமுள்ள மதுவை பழச்சாறு என்று கருதி அவரது 5 வயது பெயரன் குடித்திருக்கிறான். அடுத்த சில நிமிடங்களில் சிறுவனுக்கு புரையேறி  மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அச்சிறுவனை அவனது பெற்றோர்  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பெயரன் உயிருக்கு போராடுவதைக் கண்ட தாத்தா சின்னசாமி அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தையும் மருத்துவம் பலனின்றி உயிரிழந்து விட்டது. இதைவிட பெரிய கொடுமையும், சோகமும், இழப்பும் இருக்க முடியாது.

குடி குடியைக் கெடுக்கும். மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு என்பன உள்ளிட்ட எச்சரிக்கை வாசகங்கள் அனைத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டு இது தான். தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பது தான் தாத்தாவும், பெயரனும் உயிரிழப்பதற்கு காரணம் ஆகும்.

ஒரே நேரத்தில் தாத்தாவையும், பெயரனையும் இழந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகத்தை யாராலும் போக்க முடியாது. மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் மதுக்கடைகளை திறந்து, இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்து வரும் தமிழ்நாடு அரசு தான், இந்த இரட்டை உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

மதுவின் தீமைகள் குறித்து அறியாமல் சாகசம் செய்யும் மனப்போக்குடன் மாணவர்கள் பள்ளிகளின் வகுப்புகளில் அமர்ந்து மது அருந்தும் கொடுமைகள்  தமிழ்நாட்டில் நடக்கின்றன; போதை தலைக்கேறிய நிலையில் குழந்தைகளுக்கும் மதுவைக் கொடுத்துக் கெடுக்கும் இழி செயலில் சில குடிகாரர்கள்  ஈடுபடும் காட்சிகள் காணொலிகளாக சமூக வலைத்தளங்களில் வெளியாகின;

இப்போது புதிய பரிணாமமாக வீட்டில் பெரியவர்கள் குடித்து விட்டு வைத்த மதுவை விவரம் அறியாமல் குழந்தை குடித்து உயிரிழந்த கொடுமை அரங்கேறியிருக்கிறது. இந்த ஆபத்தான போக்கு தடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் மட்டும் மது குடிப்பதால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்; ஏராளமான பெண்கள் இளம் வயதில் கைம்பெண்களாகின்றனர்; 200 வகையான நோய்கள் ஏற்படுகின்றன. குடும்ப வன்முறையும், வறுமையும் பெருகுகின்றன;

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 10 முதல் 20 விழுக்காடு வரை குறைகிறது. இவ்வளவுக்குப் பிறகும் மதுவால் கிடைக்கும் வருமானத்திற்காக மது வணிகத்தை அரசு தொடர்வது பெருங்கேடாது; மக்கள் நலம் பேணும் அரசுக்கு இது அழகல்ல.

மதுவுக்கு எதிராக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறார். அதன்பயனாக மதுவின் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், மதுக்கடைகள் இருக்கும் வரை மக்கள் மதுவுக்கு அடிமையாவதை யாரும் தடுக்க முடியாது.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையைப் பின்பற்றி தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும்  மதுவிலக்கை இப்போது ஆதரிக்கத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சரும் மது விலக்கை வலியுறுத்தியவர் தான். இப்போதும் மதுவிலக்கில் அவருக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

எனவே, தமிழ்நாட்டில் இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கவும், மக்கள் மகிழ்ச்சியாக  வாழ்வதை உறுதி செய்யவும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

அதற்காக தமிழ்நாட்டில் உள்ள 5 ஆயிரத்திற்கும் அதிகமான மதுக்கடைகளை ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss say about tasmac shutdown issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->