திமுக – தவெக கள்ள கூட்டணி? திமுகவின் திட்டமே வேறு.. விஜய்யை கடுமையாக விமர்சித்தஅர்ஜூன் சம்பத்
DMK Tvk fake alliance DMK plan is different Arjun Sampath harshly criticizes Vijay
நடிகர் விஜய் திமுகவின் ஆதரவாளராக செயல்பட்டு வருவதாகவும், திமுகவுக்கு எதிராக பேச வைத்து அதிமுக மற்றும் பாஜக வாக்குகளை பிரிக்கவே அவரது அரசியல் பயன்படுத்தப்படுகிறது என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் மறைமுக கூட்டணியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை பல்வேறு கட்சித் தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், குறிப்பாக பாஜகவை கொள்கை எதிரி என கூறும் விஜய், அந்தக் கட்சியை நேரடியாக ஏன் விமர்சிப்பதில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. இதனை அடிப்படையாக கொண்டு, விஜய் பாஜகவின் ‘C டீம்’ என திமுக தரப்பு விமர்சித்து வருகிறது.
இதற்கிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “விஜய் தனித்து இயங்குகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. பாஜகவுடன் அவர் காட்டும் அணுகுமுறை அவருக்கே அரசியல் ரீதியாக பாதகமாக முடியும்” என்று கருத்து தெரிவித்திருந்தார். மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரியும், “திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி என விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல, துடுக்கு மொழி. திமுகவை விமர்சிக்கும் அளவுக்கு பாஜக மீது ஏன் விமர்சனம் இல்லை?” என கேள்வி எழுப்பினார்.
இந்த விமர்சனங்களுக்கு நடுவில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், விஜய்யை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் விஜய் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார். திமுகவும் சில கிறிஸ்துவ அமைப்புகளும் சேர்ந்து விஜய்க்கு பேச வேண்டிய விஷயங்களை எழுதிக் கொடுக்கின்றன. மக்கள் நீதி மையத்திற்கு ஏற்பட்ட நிலைதான் தமிழக வெற்றி கழகத்திற்கும் ஏற்படும். ஆர்எஸ்எஸ் குறித்து பேச விஜய்க்கு அரசியல் அனுபவமும் வயதும் இல்லை. தேர்தலில் தவெக 3 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், ஈரோட்டில் நடைபெற்ற விஜயின் பொதுக்கூட்டம் தோல்வியடைந்ததாகவும், திமுகவுக்கும் தவெகவிற்கும் தான் போட்டி எனும் தோற்றத்தை உருவாக்க முயற்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டினார். “திமுக ஒரு தீய சக்தி என எழுதிக் கொடுப்பதே திமுக தான். ஒவ்வொரு தேர்தலிலும் நடிகர்களை வைத்து கட்சி தொடங்கச் செய்து, திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கும் யுக்தியை அந்த கட்சி கையாள்கிறது. கடந்த தேர்தலில் நடிகர் கமலை கொண்டு மக்கள் நீதி மையத்தை தொடங்க வைத்தனர். இப்போது நடிகர் விஜய் திமுகவின் A டீம்மாக செயல்படுகிறார்” என்று அவர் தெரிவித்தார்.
அர்ஜூன் சம்பத்தின் இந்தக் கருத்துகள், விஜயின் அரசியல் நோக்கம் மற்றும் தவெகவின் நிலைப்பாடு குறித்து புதிய அரசியல் விவாதங்களை கிளப்பியுள்ளது.
English Summary
DMK Tvk fake alliance DMK plan is different Arjun Sampath harshly criticizes Vijay