20+1 கேட்கும் தேமுதிக! கறார் காட்டும் திமுக! பிரேமலதாவிடம் பேசிய கனிமொழி? ஆட்டம் காட்டும் பிரேமலதா! கழட்டிவிட முடிவு!
DMK shows its determination Kanimozhi spoke to Premalatha
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துடன் திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இந்த தகவல்களை கனிமொழி தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அந்தக் கூட்டணிக்குள் உள்ள சில காங்கிரஸ் நிர்வாகிகள் அமைச்சர் பதவி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வெளிப்படையாக பேசுவது, திமுக–காங்கிரஸ் உறவுகளில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று டெல்லி காங்கிரஸ் தலைமை அறிவுறுத்திய போதிலும், அந்த நிலை தொடர்கிறது.
இந்த பின்னணியில், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடருகிறதா என்ற கேள்விக்கு, தமிழக காங்கிரஸ் தேர்தல் மேலிட பொறுப்பாளர் கிரீஷ், “இதனை திமுக தான் அறிவிக்க வேண்டும்; அதன்பிறகே பேச்சுவார்த்தை தொடங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, திமுக நிர்வாகி தளபதி காங்கிரஸை கடுமையாக விமர்சித்தது இரு கட்சிகளுக்கிடையேயான மோதலை மேலும் வெளிப்படுத்தியது.
இந்த சூழ்நிலையில், அண்மையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் கனிமொழி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்த சந்திப்பில் கூட்டணி நிலவரம் மற்றும் தமிழக அரசியல் குறித்து இருவரும் பேசிக் கொண்டதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, திமுக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதில் கனிமொழி நேரடியாக பிரேமலதா விஜயகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் செய்திகள் பரவின.
அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது என்னவென்றால், தேமுதிக தரப்பில் 15 முதல் 20 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கோரப்பட்டதாகவும், அதற்கு திமுக தரப்பில் அதிகபட்சமாக 5 அல்லது 6 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்றும், ராஜ்யசபா சீட் வழங்க வாய்ப்பே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தேமுதிக 5 அல்லது 6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடரும்; இல்லையெனில் அந்தக் கட்சியை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற முடிவில் திமுக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததா என்று கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் அதனை முற்றிலும் மறுத்தார். “நான் யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கூட்டணி குறித்து அறிவிப்பை தலைவர் மு.க. ஸ்டாலின்தான் வெளியிடுவார்” என்று கனிமொழி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தேமுதிக தனது கடும் பிடிவாத நிலைப்பாட்டால் சரியான கூட்டணியை அமைக்க முடியாமல், வரவிருக்கும் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து விடுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. தேமுதிக எடுக்கும் அடுத்த கட்ட முடிவு, அந்தக் கட்சியின் எதிர்கால அரசியல் பயணத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
English Summary
DMK shows its determination Kanimozhi spoke to Premalatha