2026 தேர்தலுக்கான திமுக ‘பண்டோரா பாக்ஸ்’ – விஜய்க்கும் எடப்பாடிக்கு ஒரே நேரத்தில் செக்! திமுகவின் பயங்கர பிளானும் அரசியல் கணக்கும்!
DMK Pandora Box for 2026 elections Check for Vijay and Edappadi at the same time DMK terrible plan and political calculation
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுக இன்னும் திறக்காத ஒரு “பண்டோரா பாக்ஸ்” இருப்பதாகவும், அது திறந்தால் எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் அரசியல் நெருக்கடி உருவாகும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த பண்டோரா பாக்ஸ் வேறு எதுவும் அல்ல; திமுக தயாரித்து வரும் தேர்தல் அறிக்கையே என்கிறார்கள்.
2026 தேர்தலுக்காக திமுக முன்வைக்க உள்ள வாக்குறுதிகள், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, நடிகர் விஜய் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை அரசியல் ரீதியாக கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களை குறிவைத்து பல புதிய திட்டங்கள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கான புதிய நலத்திட்டங்கள், முக்கியமான இலவசத் திட்டங்கள், இளைஞர்களை கவரும் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், 2026 தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு, அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்கள், புதிய இலவசங்கள் போன்ற பல அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பும் இருப்பதாக திமுக தரப்பு தெரிவிக்கிறது.
இதற்கான முன்னோட்டமாக, திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்களின் கருத்துகளை பெறும் நோக்கில் ஜனவரி 3, 2026 அன்று புதிய செயலியை அறிமுகப்படுத்தினார். விவசாயிகள், வணிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகள் இந்த செயலி, வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாக சேகரிக்கப்பட உள்ளன.
ஏற்கனவே திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், டி.கே.எஸ்.இளங்கோவன், கோவி.செழியன், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, எம்.எம். அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி. சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், தேர்தலுக்கு முன்பாக மக்கள் நலத்திட்டங்கள் குறித்த ஒரு முக்கியமான சர்வேயை திமுக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்களைக் கொண்ட சிறப்புக் குழு, வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் நேரடியாக பேசும் வகையில் இந்த சர்வே நடைபெற உள்ளது. பொங்கல் பரிசு கிடைத்ததா, மகளிர் உரிமைத் தொகை மற்றும் பள்ளி உதவிகள் சரியாக சென்றடைந்ததா என்பதைக் கேட்டு, ஒரு படிவம் மூலம் விவரங்கள் சேகரிக்கப்படும். அந்த படிவத்தை சமர்ப்பிப்பவர்களுக்கு QR குறியீடு வழங்கப்பட்டு, அவர்களின் கோரிக்கைகளின் நிலையை அறியவும் வழிவகை செய்யப்படும்.
இந்த சர்வேயில் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், சில கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்கவும், சிலவற்றை 2026 தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கவும் திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், தேர்தலுக்கு முன்பே மக்கள் மத்தியில் வலுவான நம்பிக்கையை உருவாக்குவதுடன், எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக கடும் சவாலுக்கு உள்ளாக்கும் தந்திரத்தை திமுக கையில் எடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
English Summary
DMK Pandora Box for 2026 elections Check for Vijay and Edappadi at the same time DMK terrible plan and political calculation