'அவையின் அலுவல்களை நிறுத்தி வைத்து, நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்.' திமுக எம்.பி வில்சன் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்..!
DMK MP Wilson issues adjournment motion notice demanding discussion on NEET exam issue
''சமூக நீதி மற்றும் கல்விக்கான உரிமை ஆகியவற்றின் மீதான தொலைநோக்கு பாதிப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, விதி 267-ன் கீழ் அவையின் அலுவல்களை உடனடியாக நிறுத்தி வைத்து, நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்.'' என மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வழங்கியுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''நீட் என்பது கொடூரமான தேர்வு முறையாக மாறியுள்ளது. இது பயிற்றுவிக்கும் மையங்களை சார்ந்த ஒரு தேர்வாக மாறியுள்ளது. இதில் வெற்றி என்பது உண்மையான திறமையை விட விலையுயர்ந்த தனியார் பயிற்சி மையங்களை அணுகுவதையே பொறுத்துள்ளது.
இது மாநில வாரியங்கள், அரசுப் பள்ளிகள், கிராமப்புறப் பின்னணிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதன் மூலம் சமத்துவம், சமூக நீதி மற்றும் சம வாய்ப்பு ஆகிய அரசியலமைப்புத் கொள்கைகளை வீழ்த்தியுள்ளது.
வினாத்தாள் கசிவு, திட்டமிடப்பட்ட தேர்வு முறைகேடுகள், ஆள்மாறாட்டம் மற்றும் பிற குளறுபடிகள் தொடர்ந்து நடப்பதன் மூலம் நீட் தேர்வின் நம்பகத்தன்மை மீண்டும் மீண்டும் சீர்குலைந்துள்ளது. இந்தத் தொடர் தோல்விகள் லட்சக்கணக்கான மாணவர்களது மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கையை உடைத்துள்ளன. இத்தகைய தொடர் குளறுபடிகளால் சூழப்பட்ட ஒரு தேர்வு முறை, நாட்டில் மருத்துவராக விரும்பும் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதை இனி தொடர அனுமதிக்க முடியாது.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டங்கள், தொடர்ச்சியான தேர்வு முறைகேடுகள், தேர்வு முறையின் மீதான பொது நம்பிக்க இழப்பு, கூட்டாட்சித் தத்துவம், சமூக நீதி மற்றும் கல்விக்கான உரிமை ஆகியவற்றின் மீதான தொலைநோக்கு பாதிப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, விதி 267-ன் கீழ் அவையின் அலுவல்களை உடனடியாக நிறுத்தி வைத்து, இது குறித்து விவாதிக்க வேண்டும்.
தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 மற்றும் தேசிய பல் மருத்துவ ஆணையச் சட்டம் 2023 ஆகியவற்றில் தகுந்த திருத்தங்களைச் செய்து நீட் தேர்வை ரத்து செய்ய அரசாங்கத்தை அவை வலியுறுத்த வேண்டும்.'' என்று திமுக எம்.பி வில்சன் வழங்கிய நோட்டிஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
DMK MP Wilson issues adjournment motion notice demanding discussion on NEET exam issue