சட்டசபையில் தடுமாறி விழுந்த திமுக சட்டமன்ற உறுப்பினரை கைகொடுத்து தூக்கிவிட்ட முதலமைச்சர் விஜய்!
DMK MLAs Protest in TN Assembly During Police Demand Debate CM Vijays Gesture to DMK MLA Durai Chandrasekaran Goes Viral
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் விளக்கமளித்துப் பதிலுரையாற்றினார். முதலமைச்சரின் பதிலுரையைத் தொடர்ந்து, அதன் மீது மீண்டும் பேசத் தங்களுக்கு அனுமதி வழங்கக் கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பியதால் பேரவையில் பரபரப்பான சூழல் நிலவியது.
திமுக உறுப்பினர்களின் இந்த நடத்தைக்குக் கடும் கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், முதலமைச்சர் பதிலுரையாற்றிய போது உறுப்பினர்கள் அமைதி காத்து முழுமையாகக் கேட்டிருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார். அவையின் அனுமதியின்றி போஸ்டர்களைக் காட்டுவதையும், கூச்சலிட்டுப் பேரவை நடைமுறைகளுக்கு இடையூறு செய்வதையும் ஒருபோதும் ஏற்க முடியாது எனத் தெரிவித்த சபாநாயகர், முதலமைச்சரின் உரை நேரத்தில் அமைதி காத்து ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் பேசுவதற்கு வாய்ப்பளித்திருப்பேன் என்றும் தெளிவுபடுத்தினார்.
சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த திமுக உறுப்பினர்கள், சபாநாயகர் இருக்கையின் முன்பாகத் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அமர்வதற்குத் தடையாக இருந்ததால், முதலமைச்சர் விஜய் உடனடியாக எழுந்து தனது இருக்கையைச் சற்று நகர்த்தி வைத்து அவர்களுக்கு போதிய இடம் ஏற்படுத்திக் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் திடீரென எழுந்திருக்க முடியாமல் தடுமாறிய போது, முதலமைச்சர் விஜய் விரைந்து சென்று அவருக்குக் கைகொடுத்துத் தூக்கிவிட்டார். அரசியல் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் பேரவையில் அரங்கேறிய இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நேரலையில் ஒளிபரப்பான நிலையில், அதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி மக்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
English Summary
DMK MLAs Protest in TN Assembly During Police Demand Debate CM Vijays Gesture to DMK MLA Durai Chandrasekaran Goes Viral