19 கட்சிகளுடன் திமுக மெகா கூட்டணி! முக ஸ்டாலின் போட்ட மாஸ்டர் ப்ளான்! 2026 தேர்தலில் வியூகம் தீவிரம்!
DMK mega alliance with 19 parties Master plan laid out by Mk Stalin Strategy intensifies for 2026 elections
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் கட்சிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் 13 கட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த முறை அந்தக் கட்சிகள் தொடர்வதோடு புதிதாக பல கட்சிகள் இணைந்துள்ளதால் கூட்டணியின் பரப்பளவு விரிவடைந்துள்ளது.
புதியதாக மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்டவை இணைந்துள்ளன. இதன் மூலம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை வழிநடத்தி வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திமுக அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவருடன் முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத் உள்ளிட்ட ஆதரவாளர்களும் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்ததால், கடந்த 2021 தேர்தலை விட குறைந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகள் ஏற்க வேண்டும் என திமுக தரப்பு வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை அதற்கு மேலான தொகுதிகளை கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 40 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகின்றது. ஆனால், திமுக தரப்பு இதனை ஏற்க முடியாது எனத் தெரிவித்ததாக தகவல். சமரச முயற்சியாக 25 முதல் 27 தொகுதிகள் வரை வழங்கப்படலாம் என்றும், எதிர்கால உள்ளாட்சி தேர்தல்களில் கூடுதல் பங்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள்: திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதிதமிழர் பேரவை, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை ஆகியவை.
விரிவடைந்த கூட்டணி பலம் காரணமாக 2026 தேர்தலை திமுக மிகப்பெரிய அரசியல் வியூகத்துடன் சந்திக்கத் தயாராக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல சமூக அடிப்படையிலான மற்றும் பிராந்திய அடையாளம் கொண்ட கட்சிகள் இணைந்திருப்பதால், மாநிலம் முழுவதும் வாக்கு பரவலை அதிகரிக்க முடியும் என மதிப்பிடப்படுகிறது.
இருப்பினும், அதிக கட்சிகள் இணைந்துள்ள சூழலில் தொகுதிப் பங்கீடு மற்றும் உள்ளக சமநிலையை பராமரிப்பது திமுக தலைமையின் முக்கிய சவாலாகவே உள்ளது. இறுதி பட்டியல் மற்றும் தொகுதி ஒதுக்கீடு வெளியான பிறகே கூட்டணியின் உண்மையான அரசியல் வலிமை வெளிப்படும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
DMK mega alliance with 19 parties Master plan laid out by Mk Stalin Strategy intensifies for 2026 elections